ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 8 தோல்வி 2 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடும் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் முதல் முறையாக வெளியேறியது. அத்துடன் 2024, 2025 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத சென்னை பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
இதை அடுத்து சிஎஸ்கே அணி மே 3ஆம் தேதி பெங்களூருவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. அடுத்த வருடம் கம்பேக் கொடுப்பதற்கான வேலைகளைத் துவங்கியுள்ள சிஎஸ்கே அந்தப் போட்டியிலும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் சிஎஸ்கே அணியிடம் இப்போதும் எதிரணிகளுக்கு சவால் கொடுத்து வெற்றி பெறும் திறமை இருப்பதாக பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி தெரிவித்துள்ளார்.
மிஸ்ஸான பிளே ஆஃப்:
மேலும் ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் ஆகிய 3 அணிகளுக்கு எதிராக முறையே சென்னை அணி 6, 25, 18 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே நெருக்கமாக சென்று வெற்றியை தவற விட்டதாக ஹசி கூறியுள்ளார். ஒருவேளை அந்த 3 போட்டிகளிலும் வென்றிருந்தால் இந்நேரம் சென்னை 10 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பைக் கொண்டிருக்கும் என்று ஹசி ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.
இது பற்றி ஹசி பேசியது பின்வருமாறு. “இந்த வருடம் எங்களுக்கு நன்றாக அமையவில்லை என்பதற்காக நாங்கள் பதற்றமடைந்து அனைத்தையும் தூக்கி எறியப் போவதில்லை. ஆனால் நாங்கள் இன்னும் சில இடங்களில் நேர்த்தியாக செயல்பட வேண்டும். நாங்கள் நிறைய போட்டிகளை வெல்லாமல் புள்ளிப்பட்டியலில் கீழே இருக்கிறோம் என்பது எனக்குத் தெரியும்”
ஹசி ஆதங்கம்:
“ஆனால் வெற்றிக்கு அதிக தொலைவில் இருக்கிறோம் என்று நான் நினைக்கவில்லை. எங்களுடைய அணியில் சில மேட்ச் வின்னர்கள் இருக்கின்றனர். எனவே எந்த அணியுடனும் கண்டிப்பாக எங்களால் போட்டியிட முடியும். அந்த 3 போட்டிகளைப் பற்றி எனது மனம் சிந்தித்துக் கொண்டிருக்கிறது. அதில் வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக நாங்கள் டாப் 4 இடத்திற்கு நெருக்கமாக இருந்திருப்போம்”
இதையும் படிங்க: அந்த அணியோட எழுச்சி எப்போ வேணாலும் விழலாம்.. ஸோ 2025 ஐபிஎல் கோப்பை ஆர்சிபி’க்கே.. கவாஸ்கர் கணிப்பு
“இருப்பினும் அதைத் தவற விட்ட எங்களுக்கு புதிய வீரர்களுக்கு வாய்ப்பைக் கொடுக்க இடம் கிடைத்துள்ளது. அவர்கள் அந்த வாய்ப்புகளைப் பிடித்து அடுத்த சில வருடங்களுக்கு அசத்துவதற்கான இடத்தைப் பிடிப்பார்கள் என்று நம்புகிறேன். எங்களுக்கு சில வெற்றிகள் மற்றும் சில வாய்ப்புகளை பிடித்துக் கொண்ட நல்ல வீரர்கள் கிடைத்தால் அதுவே 2025 ஐபிஎல் தொடரின் அருமையான முடிவாக இருக்கும்” என்று கூறினார்.



