
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் இருபதாம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது 8வது போட்டியில் மும்பையை சந்திக்கிறது. இந்த வருடம் மும்பையை முதல் போட்டியில் தோற்கடித்த அந்த அணி அடுத்த 5 போட்டிகளில் 5 தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்தது. அதன் பின் தோனி தலைமையில் லக்னோவுக்கு எதிராக வென்ற சிஎஸ்கே மீண்டும் மும்பையை வீழ்த்த தயாராகியுள்ளது.
முன்னதாக சிஎஸ்கே 5 கோப்பைகளை வெல்வதற்கு கேப்டனாக உதவிய தோனி 43 வயதில் தன்னுடைய விருப்பத்திற்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் ரோஹித் சர்மா, ரிசப் பண்ட் போன்றவர்களைக் காட்டிலும் தோனி நன்றாகவே செயல்பட்டு வருகிறார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் சிஎஸ்கே 5 தொடர் தோல்விகளை சந்தித்தது.
அப்போது 43 வயதாகும் தோனி இனிமேலும் விளையாடாமல் ஓய்வு பெற்று வீட்டில் அமர வேண்டும் என்று எதிரணி ரசிகர்கள் கலாய்த்தனர். ஆனால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஒரு ரன் அவுட், ஒரு கேட்ச், ஒரு ஸ்டம்பிங் செய்த தோனி 26* ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார். அதனால் ஐபிஎல் வரலாற்றில் அதிக வயதில் ஆட்டநாயகன் விருதை வென்ற வீரர் என்ற சாதனையை படைத்த தோனி தன்னை கிண்டல் செய்தவர்களின் முகத்தில் கரியை பூசினார்.
இந்நிலையில் தோனி தங்களுக்காக இன்னும் விளையாட சிஎஸ்கே அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசி பாராட்டியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனி நன்றாக செயல்பட்டு வருகிறார். சொல்லப்போனால் கடந்த வருடத்தைக் காட்டிலும் அவர் இந்த வருடம் நன்றாகவே செயல்பட்டு வருகிறார். அவர் தன்னுடைய முழங்காலில் தற்போது நல்ல நம்பிக்கையைப் பெற்றுள்ளார்”
“அதனால் எப்போதும் போல மீண்டும் அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். கீப்பராக வேகமாக ஸ்டம்பிங் செய்யும் அவர் கடந்த போட்டியில் செய்த ரன் அவுட்டை பார்த்தீர்களா? அது அற்புதமாக இருந்தது. அந்தளவுக்கு அவர் துல்லியமாக பவராக பந்தை வீசி ரன் அவுட் செய்தது சிறப்பானது. அந்த வகையில் இப்போதும் தோனி நன்றாக செயல்படுகிறார்”
இதையும் படிங்க: 73 ரன்ஸ்.. டேவிட் வார்னரை முந்திய கிங் கோலி புதிய ஐபிஎல் சாதனை.. பஞ்சாப்பை எளிதாக சாய்த்த ஆர்சிபி
“வயது என்பது வெறும் நம்பர் என்று நாம் அடிக்கடி சொல்வோம். அதற்கு எடுத்துக்காட்டாக திகழும் தோனி இப்போது மகிழ்ச்சியுடன் கிரிக்கெட்டை விளையாடுகிறார். பல்வேறு வகைகளில் அவர் எங்களுடைய அணியின் வெற்றிகளில் பங்காற்றுகிறார். அவரை கொண்டிருப்பதற்காக நாங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்” என்று கூறினார்.