ஆஷஸ் 2025/26 டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடைபெற்ற 4 போட்டிகளின் முடிவில் 3 – 1* (5) என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது. அதனால் தொடர்ந்து 15வது வருடமாக இங்கிலாந்தை தங்களது சொந்த மண்ணில் தோற்கடித்து ஆஸ்திரேலியா வென்றுள்ளது. மறுபுறம் 4வது போட்டியில் வென்ற இங்கிலாந்து ஒயிட்வாஸ் தோல்வியைத் தவிர்த்ததுடன் 15 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்று நிம்மதி பெருமூச்சு விட்டது.
இதைத் தொடர்ந்து கடைசிப் போட்டி 2026 புத்தாண்டில் ஜனவரி 3ஆம் தேதி சிட்னி மைதானத்தில் துவங்குகிறது. இந்நிலையில் அந்தப் போட்டியுடன் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் மரியாதையுடன் ஓய்வு பெறுங்கள் என்று ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவுக்கு முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ஆலோசனைத் தெரிவித்துள்ளார்.
வேற சான்ஸ் கிடைக்காது:
ஏனெனில் 39 வயதாகும் உஸ்மான் கவாஜா சமீப காலங்களாகவே தடுமாற்றமாக விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த 2 வருடங்களில் அவர் 25.93, 36.11 என்ற சுமாரான சராசரியில் பேட்டிங் செய்து வருகிறார். அடுத்ததாக ஆஸ்திரேலியா 8 மாதங்கள் கழித்து வரும் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
அப்போது வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு அவரை ஆஸ்திரேலிய தேர்வுக்குழு கழற்றி விடுவதற்கு பிரகாச வாய்ப்புள்ளது. எனவே கடைசி ஆஷஸ் போட்டியில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் ஓய்வு பெறுமாறு அவரை மைக்கேல் வாகன் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “உங்களுடைய விதியை அவர்களை தீர்மானிக்க விடாதீர்கள். நீங்களே தீர்மானியுங்கள் என்றே உஸ்மானுக்கு நான் சொல்வேன்”
வாகன் அட்வைஸ்:
“நீண்ட காலமாக விளையாடும் ஒருவருக்கு ஓய்வு முடிவை எடுக்கும் உரிமையை அவரிடமே கொடுக்க வேண்டும். அந்த வகையில் சிறந்த கேரியரைக் கொண்டுள்ள உஸ்மான் கவாஜா போல தங்களது நாட்டில் சொந்த மைதானத்தில் குட்பாய் சொல்லும் வாய்ப்பு பல வீரர்களுக்கு கிடைக்காது. ஒருவேளை உஸ்மான் அதை செய்யாவிட்டால் தனது கேரியரை தம்முடைய வழியில் முடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போகலாம்”
இதையும் படிங்க: தம்பியும் நானும் சேர்த்து பேட்டை உயர்த்துவதே கனவு.. சீக்கிரம் நிஜமாக்குவோம்.. சர்பராஸ் பேட்டி
“அவருக்கு ஆஷஸ் தொடரில் சொந்த மண்ணில் விடைபெறுகிறேன் என்று சொல்வதை விட வேறு சிறந்த வாய்ப்பிருக்கும் என்று நான் சிந்திக்கவில்லை. ஒருவேளை உஸ்மான் மீண்டும் சண்டையிடுவதற்கான எனர்ஜியும், திறனைக் கொண்டிருந்தால் அதுவும் நடப்பதைப் பார்க்கலாம். ஆனால் உங்களது கேரியரை ஆஷஸ் தொடரில் சிட்னியில் விடுவது எனக்கு நன்றாகத் தோன்றுகிறது” என்று கூறினார்.



