
இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து வென்ற நிலையில் இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 29ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 427 ரன்கள் குவித்து அசத்தியது.
அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ஜோ ரூட் சதமடித்து 143, கஸ் அட்கின்ஷன் 118 ரன்கள் எடுத்தனர். இலங்கை சார்பில் அதிகபட்சமாக அசித்தா பெர்னாண்டோ 5 விக்கெட் எடுத்து அசத்தினார். இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் “குட் மார்னிங் இந்தியா” என்ற பதிவை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆகியோரின் பேட்டிங் புள்ளி விவரங்களை மைக்கேல் வாகன் பதிவிட்டுள்ளார். அதில் விராட் கோலி இதுவரை 191 இன்னிங்ஸில் 29 சதங்கள் 30 அரை சதங்கள் 26 சிக்ஸர்கள் உட்பட 8848 ரன்களை 49.15 என்ற சராசரியில் 55.57 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளதாக எழுதப்பட்டுள்ளது. அதிகபட்ச ஸ்கோர் 254* ரன்கள்.
மறுபுறம் இங்கிலாந்தின் ஜோ ரூட் 263 இன்னிங்ஸில் 32 சதங்கள் 64 அரை சதங்கள் 44 சிக்ஸர்கள் உட்பட 12131 ரன்களை 50.33 என்ற சராசரியில் 56.70 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்துள்ளதார். அதிகபட்ச ஸ்கோர் 254 ரன்கள். இதிலிருந்து விராட் கோலியை விட எங்களுடைய ஜோ ரூட் தான் டெஸ்ட் கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன் என்று மைக்கேல் வாகன் சொல்லாமல் குறிப்பிட்டுள்ளார்.
அந்த வகையில் மறைமுகமாக அவர் விராட் கோலி மற்றும் இந்திய ரசிகர்களை புள்ளி விவர ஆதாரத்துடன் கிண்டலடித்துள்ளார் என்றே சொல்லலாம். அவர் கலாய்ப்பதற்கு தகுந்தார் போல் கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் ஜோ ரூட் வெறும் 17 டெஸ்ட் சதங்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் விராட் கோலி 27 சதங்கள் அடித்திருந்தார். அங்கிருந்து கடந்த 4 வருடங்களில் விராட் கோலி வெறும் 2 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார்.
இதையும் படிங்க: அறிமுகப் போட்டியிலேயே வரலாற்று சாதனை படைத்த இந்திய வீரர்.. வாய்ப்புக்காக ஏங்கியே 31 வயதில் ஓய்வு
இருப்பினும் கடந்த 4 வருடங்களில் 4 சதங்கள் அடித்துள்ள ஜோ ரூட் 10000 ரன்களையும் கடந்துள்ளார். அதனால் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார் என்ற பேச்சுக்களும் எதிர்பார்ப்புகளும் காணப்படுகிறது. ஆனால் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் மங்கிய செயல்பாடுகளை வெளிப்படுத்தி வருவது இந்திய ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.