இலங்கைக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற்ற அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. இருப்பினும் 3வது போட்டியில் அபாரமாக விளையாடிய இலங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
அதன் வாயிலாக இங்கிலாந்து மண்ணில் 2014க்குப்பின் 10 வருடங்கள் கழித்து இலங்கை ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று அசத்தியது. அத்துடன் ஒயிட்வாஷ் தோல்வியை தவிர்த்த இலங்கை ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பியது. மறுபுறம் அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 325 ரன்கள் குவித்து பின்னர் இலங்கையை 263 ரன்களுக்கு சுருட்டியது.
இங்கிலாந்தின் அஜாக்கிரதை:
அதனால் 62 ரன்கள் முன்னிலைப் பெற்ற இங்கிலாந்து குறைந்தது 300 – 400 ரன்மழை இலக்காக நிர்ணயித்து எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 2வது இன்னிங்ஸில் சொதப்பலாக பேட்டிங் செய்த அந்த அணி 156 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதனால் இலங்கைக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து மோசமான சோதனை படைத்தது.
அப்படி 2வது இன்னிங்சில் சுமாராக விளையாடியது கடைசியில் இங்கிலாந்தின் தோல்விக்கும் காரணமானது. இந்நிலையில் ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றி விட்டதால் இலங்கை என்ன செய்து விடப்போகிறது என்று அஜாக்கிரதையுடன் இங்கிலாந்து 3வது போட்டியில் விளையாடி தோற்றதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவாக இருந்தா காலி:
மேலும் இதுவே இலங்கைக்கு பதிலாக இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவாக இருந்திருந்தால் கண்டிப்பாக அத்தொடரில் இங்கிலாந்து தோல்வியை சந்தித்திருக்கும் என்றும் அவர் சாடியுள்ளார். இது பற்றி மைக்கேல் வாகன் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டையும் இலங்கையையும் அவமரியாதை செய்ததாக நான் கருதுகிறேன். ஏனெனில் அவர்கள் 3வது போட்டியில் பேட்டிங் செய்வதிலும் ஃபீல்டிங் வைப்பதிலும் அதிகப்படியான ஆக்ரோஷத்தை காட்டினர்”
இதையும் படிங்க: பும்ராவிற்கு துணைக்கேப்டன் பதவி மறுக்கப்பட்டதுக்கு காரணமே இதுதானாம் – வெளியான தகவல் இதோ
“இங்கிலாந்து நல்ல நிலையை தொட்ட பின் அஜாக்கிரதையாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளது. கடந்த ஆஷஸ் தொடரிலும் இந்தியாவுக்கு எதிரான 2024 ராஜ்கோட் போட்டியிலும் அவர்கள் அதையே செய்தனர். எனவே 2025இல் காத்திருக்கும் கடினமான போட்டிகளுக்கு முன்பாக இது இங்கிலாந்தை தட்டி எழுப்பும் என்று நம்புகிறேன். இது போல இந்தியா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடினால் நீங்கள் தப்பிப்பதற்கு வழியே கிடையாது” என்று கூறினார்.



