
இங்கிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இலங்கை 3 போட்டிகள் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. மான்செஸ்டர் நகரில் ஆகஸ்ட் 21ஆம் தேதி துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முடிந்தளவுக்கு போராடியும் 236 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் தனஞ்செயா டீ சில்வா 74, மிலன் ரத்நாயகே 72 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் மற்றும் கிரிஷ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய இங்கிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 259/6 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு பென் டக்கெட் 18, கேப்டன் ஓலி போப் 6 ரன்களில் அவுட்டானார்கள்.
இருப்பினும் டான் லாரன்ஸ் 30, ஜொ ரூட் 42, ஹரி ப்ரூக் 57 ரன்கள் அடித்து கை கொடுத்தனர். அதனால் தற்சமயத்தில் 23 ரன்கள் முன்னிலையுடன் இருக்கும் அந்த அணிக்கு களத்தில் ஜேமி ஸ்மித் 72*, கஸ் அட்கின்ஷன் 4* ரன்களுடன் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் 2வது இன்னிங்ஸில் ஓரளவு நன்றாக பேட்டிங் செய்து இலங்கை 200க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் பட்சத்தில் இங்கிலாந்தை வீழ்த்த வாய்ப்புள்ளதாக முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக மான்செஸ்டர் பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதால் சமீபத்தில் இந்தியாவை தோற்கடித்தது போல இங்கிலாந்து அணியையும் இலங்கை வீழ்த்த வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார். இது பற்றி வாகன் பேசியது பின்வருமாறு. “இந்த பிட்ச்சை மிகவும் விரும்புகிறேன். அது இலங்கையை ஆர்வத்துடன் வைத்திருக்கும் என்று நினைக்கிறேன்”
“அதில் அவர்களது வெற்றி என்பது எஞ்சியுள்ள 4 விக்கெட்டுகளை வேகமாக எடுத்து 2வது இன்னிங்ஸில் நன்றாக பேட்டிங் செய்வதை பொறுத்து அமையும். குறிப்பாக மான்செஸ்டரில் பந்து க்ரிப்பாகி வருகிறது. எனவே இங்கிலாந்துக்கு எதிராக 200 ரன்களை இலக்காக நிர்ணயித்தால் இலங்கை அணி இந்த வாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்த முடியும்” என்று கூறினார்.
இதையும் படிங்க: ஆஸி தொடரை விடுங்க.. இந்தியா அந்த ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது உறுதி.. ஜெய் ஷா பேட்டி
அதே சமயம் களத்தில் உள்ள ஜேமி ஸ்மித் சதமடித்தால் போட்டி இங்கிலாந்து பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகவும் மைக்கேல் வாகன் கூறியுள்ளார். அத்துடன் இலங்கை அணியினர் இங்கிலாந்து ஸ்பின்னர் சோயப் பசீரை பார்த்து கவலைப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் மார்க் வுட், கஸ் அட்கின்ஷன், கிறிஸ் ஓக்ஸ் ஆகிய இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் இலங்கைக்கு 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.