பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அங்கு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் அந்தத் தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டிய நிலையில் களமிறங்கியுள்ளது. ஏனெனில் சமீப காலங்களில் படுதோல்விகளை சந்தித்த அந்த அணி வங்கதேசத்திடம் முதல் முறையாக சொந்த மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவமானத் தோல்வியை சந்தித்தது.
அந்த சூழ்நிலையில் அக்டோபர் ஏழாம் தேதி முல்தானில் துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 4 ரன்களில் அட்கின்ஷன் வேகத்தில் ஃபெவிலியன் திரும்பினார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் சான் மசூத் நிதானமாக விளையாடினர்.
தார் ரோட் பாகிஸ்தான்:
அவருடன் ஜோடி சேர்ந்த மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா சபிக் பொறுமையாக விளையாடினார். அந்த வகையில் ரன் குவிப்பில் ஈடுபட்ட அந்த ஜோடி அரை சதம் கடந்து இங்கிலாந்து சவாலை கொடுத்தது. நேரம் செல்ல செல்ல நங்கூரமாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே சதமடித்தனர். இரண்டாவது விக்கெட்டுக்கு 253 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்த அந்த ஜோடியில் ஷபிக் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து மறுபுறம் அசத்தலாக விளையாடிய ஷான் மசூத் 150 ரன்கள் கடந்து 151 ரன்களில் அவுட்டானார். அவர்களுடைய ஆட்டத்தால் பாகிஸ்தான் இந்த பதிவிடும் போது 285-3 ரன்கள் எடுத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியின் முல்தான் பிட்ச் பவுலர்களுக்கும் கொஞ்சமும் சாதகமாக இல்லாமல் பேட்ஸ்மேன்களுக்கு மட்டும் சாதகமாக இருப்பதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
பவுலர்களின் கல்லறை:
குறிப்பாக முல்தான் பிட்ச் தார் ரோட் போல ஃபிளாட்டாக இருப்பதாக வெளிப்படையாக தெரிவித்துள்ள அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “முல்தான் தார் ரோட் போல இருக்கிறது. அங்கே டாஸ் வென்றது சிறப்பானது. அதில் ஷான் மசூத் பெடல் ஷூ போல விளையாடுகிறார்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய ரசிகர்களால் இது மெல்போர்னான்னு யோசிச்சோம்.. ஆஸியில் பிட்ச் இப்படித் தான் இருக்கும்.. உஸ்மான் கவாஜா
அதே போல மற்றொரு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். “முல்தான் பிட்ச் – பவுலர்களின் கல்லறை” என்று வெளிப்படையாக பதிவிட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு இதே போல பாகிஸ்தான் பிட்ச் ஃபிளாட்டாக இருந்தது. அதை பயன்படுத்தி அடித்து நொறுக்கிய இங்கிலாந்து 3 – 0 (3) என்ற கணக்கில் பாகிஸ்தானுக்கு தோல்வியை பரிசளித்தது. ஆனால் 2 வருடங்களாகியும் அதே நிலைமை பாகிஸ்தானில் நீடிப்பதால் இன்னும் நீங்கள் திருந்தலையா? என்று ரசிகர்களும் ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.



