ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி 30வது போட்டி நடைபெற்றது. அதில் லக்னோவை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த சென்னை தங்களது 2வது வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 167 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய சென்னை போராடிக் கடைசி ஓவரில் இலக்கை பிடித்தது.
சென்னைக்கு துவக்க வீரர்கள் சாய்க் ரசீத் 27, ரச்சின் 37 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்து பெவிலியன் திரும்பினர். ஆனால் மிடில் ஆர்டரில் ராகுல் திரிபாதி 9, ஜடேஜா 7, விஜய் சங்கர் 9 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினார். அதனால் வெற்றி கேள்விக்குறியான போது சிவம் துபே 42*, கேப்டன் தோனி 26* ரன்கள் அடித்து தொடர்ச்சியான 6வது தோல்வியைத் தவிர்த்தனர்.
சிறந்த கீப்பர்:
அந்த வெற்றிக்கு விக்கெட் கீப்பராக 1 கேட்ச், 1 ஸ்டம்ப்பிங், 1 ரன் அவுட் செய்ததுடன் ஃபினிஷிங் செய்து அசத்திய தோனி ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் 43 வயதானாலும் உலகிலேயே தோனி சிறந்த விக்கெட் கீப்பர் என்பதை மீண்டும் சொல்வதாக 2015 உலகக் கோப்பை வென்ற முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார். மேலும் இந்தப் போட்டியில் ஃபினிஷிங்கை விட தோனியின் கேப்டன்ஷிப் சிறப்பாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் கிளார்க் பேசியது பின்வருமாறு. “தோனி களத்திற்கு வந்தாலே எப்போதும் ரசிகர்கள் சத்தம் அதிகமாக இருக்கும். அவருடைய கீப்பிங் எனக்கு ஆச்சரியமில்லை. இப்போதும் தோனி உலகின் சிறந்த என்பதை ஏற்கனவே நான் தெரிவித்துள்ளேன். அந்த வேலையில் நீண்ட காலமாக அவர் தொடர்ச்சியாக அசத்துவது அற்புதமானது”
பேசிய அனுபவம்:
“அதை விட இன்று அவருடைய கேப்டன்ஷிப் துல்லியமாக இருந்தது என்று நினைக்கிறேன். மிடில் ஓவர்களில் ஸ்பின்னர்களை மாற்றி மாற்றி வேகமாகப் பயன்படுத்திய அவர் அழுத்தத்தை உண்டாக்கினார். தோனியின் கேப்டன்ஷிப் இன்று நடந்ததில் சிறந்த விஷயமாக இருந்தது”
இதையும் படிங்க: தமிழ் புத்தாண்டில் கர்ஜனை அடித்தளம்.. தல தோனி முடிந்து போன பினிஷர் கிடையாது.. ஸ்ரீகாந்த், கைப் பாராட்டு
“சூழ்நிலையைப் படித்து அதற்குத் தகுந்தார் போல் அட்ஜஸ் செய்து கொண்ட அவர் தனது மொத்த கேரியரிலும் தோனி எவ்வாறு ஸ்பின்னர்களை இணைந்து பயன்படுத்தியிருப்பாரோ அப்படி இன்று பயன்படுத்தினார். தோனி நெருக்கமாக கொண்டு வந்த ஸ்பின்னர்கள் பிட்ச்சை சரியாகப் பயன்படுத்தி விக்கெட்டுகள் எடுத்து போட்டியின் வேகத்தைக் குறைத்தார்கள். அந்த வகையில் களத்தில் இன்று தோனியின் அனுபவம் போட்டியை தீர்மானிக்கக் கூடியதாக இருந்தது” எனக் கூறினார்.