கில்கிறிஸ்ட், ஹெய்டன் பத்தி தெரியுமா? இந்திய வீரர் பற்றிய இங்கிலாந்து வீரரின் கருத்துக்கு.. மைக்கேல் கிளார்க் பதிலடி

Micheal Clarke 2
- Advertisement -

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்தை திணறடித்து வருகிறது. குறிப்பாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல பேட்டிங் செய்து இந்தியாவை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்து சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் விளையாடாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்துள்ளது. முன்னதாக இந்த தொடரில் 22 வயதாகும் இளம் இந்திய வீரர் ஜெய்ஸ்வால் 3 போட்டிகளில் 545* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

20 வருசம் எங்க போனீங்க:
குறிப்பாக மூன்றாவது போட்டியில் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடிய அவர் பின்னர் அதிரடியாக விளையாடி ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு மொத்தம் 12 சிக்சர்களுடன் 214* ரன்கள் விளாசினார். ஆனால் அப்போது எங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை பார்த்து தான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அப்பட்டமாக பேசினார்.

அதற்கு ஏற்கனவே நாசர் ஹுசைன், மைக்கேல் வாகன் போன்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் தக்க பதிலடி கொடுத்தனர். அந்த வரிசையில் இணைந்துள்ள முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கடந்த 20 வருடங்களாக ஆடம் கில்கிறிஸ்ட், மேத்தியூ ஹைடன் போன்றவர்கள் அதிரடியாக விளையாடிய போது எங்கே போனீர்கள் என பென் டக்கெட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஈஎஸ்பிஎன் ஆஸ்திரேலியா இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய கிரிக்கெட்டை அவர் 20 வருடங்களாக தவற விட்டிருக்க வேண்டும். இளம் வீரரான அவருக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா எப்படி விளையாடியது என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவர் மேத்தியூ ஹைடன், மைக்கேல் ஸ்லேட்டர், ரிக்கி பாண்டிங், டேமின் மார்டின், ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளாரா? ஏனெனில் அவர்கள் அனைத்து பவுலர்களையும் அடித்து நொறுக்கியவர்கள்”

இதையும் படிங்க: சரியான முடிவை எடுத்துருக்கீங்க.. ரோஹித் சர்மா பற்றிய குழப்பத்தில் இந்திய அணி – பிசிசிஐக்கு கங்குலி வரவேற்பு

“இப்போது ரிவர்ஸ் ஸ்வீப் அல்லது ஸ்விட்ச் ஹிட் அல்லது ரேம்ப் ஷாட் அடிப்பதால் மட்டும் நீங்கள் ஆக்ரோஷமான வீரராகி விட முடியாது. மேத்தியூ ஹைடன் களத்தில் இறங்கி சென்று அசால்டாக பவுலரின் தலைக்கு மேல் சிக்சரை பறக்க விடுவார். அவர் அதிரடியாக விளையாட ரேம்ப் அல்லது ஸ்விட்ச் ஹிட் அடிக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது” என கூறினார். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் பஸ்பால் அணுகுமுறை நிறைய முன்னாள் வீரர்களிடம் விமர்சனங்களை எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement