சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை நிர்ணயம் செய்யும் 2024 டி20 உலகக் கோப்பை வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. எம்எஸ் தோனி தலைமையில் முதலும் கடைசியுமாக 2007ஆம் அந்த கோப்பையை வென்ற இந்தியா அதன் பின் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் திணறி வருகிறது.
அந்த வரிசையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் லீக் சுற்றில் அசத்திய இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது. அந்த தோல்விக்கு விராட் கோலி தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா, ராகுல், தினேஷ் கார்த்திக் போன்ற சீனியர் வீரர்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது.
கங்குலி வரவேற்பு:
எனவே அவர்களை கழற்றி விட்டு 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற அனுபவமிக்க ஹர்திக் பாண்டியா தலைமையிலான புதிய அணியை 2024 டி20 உலகக் கோப்பையில் களமிறக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இருப்பினும் 2023 உலகக் கோப்பையில் பாண்டியா காயமடைந்து வெளியேறிய நிலையில் கடந்த மாதம் நடந்த ஆப்கானிஸ்தான் டி20 கிரிக்கெட் தொடரில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வெற்றியும் கண்டார்.
அந்த நிலையில் 2023 உலகக் கோப்பை ஃபைனலில் இந்தியா தோல்வியை சந்தித்திருந்தாலும் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்று ரசிகர்களின் இதயங்களை வென்றதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த வாரம் தெரிவித்திருந்தார். மேலும் ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வோம் என்ற நம்பிக்கை தமக்கு முழுமையாக இருப்பதாகவும் ஜெய் ஷா கூறியிருந்தார்.
அதனால் அனைத்து குழப்பமும் நீங்கி 2024 டி20 உலகக் கோப்பையில் பாண்டியாவுக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக செயல்படப்போவது 100% உறுதியாகியுள்ளது. இந்த முடிவுக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் இந்திய கேப்டன் சௌரவ் கங்குலி வரவேற்பு தெரிவித்துள்ளார் இது பற்றி அவர் பேசியுள்ளது பின்வருமாறு. “இந்திய அணியின் கேப்டனாக டி20 உலகக் கோப்பையில் செயல்படுவதற்கு ரோகித் சர்மா சரியானவர்”
இதையும் படிங்க: இந்தியாவில் ஜெயிக்க பஸ்பால் போதாது.. அதுல குருவா இருக்கணும்.. இங்கிலாந்தின் திணறல் பற்றி மேத்தியூ ஹைடன்
“கடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் அபாரமாக வழி நடத்திய அவருடைய தலைமையில் இந்தியா 10 தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்றது இப்போதும் நம்முடைய நினைவுகளில் புத்துணர்ச்சியுடன் இருக்கிறது. எனவே ரோகித் சர்மா தான் மீண்டும் கேப்டனாக செயல்படுவதற்கு மிகவும் சரியானவர்” என்று கூறினார். இதைத்தொடர்ந்து 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் சாதாரண வீரராக களமிறங்கும் ரோஹித் சர்மா பேட்டிங்கில் பெரிய ரன்கள் குவிக்கும் முனைப்புடன் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.