இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த சீசனில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்கும் 10 அணிகளில் தங்களது முதல் லட்சிய கனவு கோப்பையை வெல்லும் முனைப்புடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி களமிறங்குகிறது. கடந்த 15 வருடங்களாக அனில் கும்ப்ளே முதல் விராட் கோலி வரை நிறைய தரமான கேப்டன்கள் தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டிவில்லியர்ஸ் போன்ற நிறைய நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் விளையாடியும் முக்கிய தருணங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள அந்த அணி கோப்பையை வெல்ல முடியாமல் கடுமையான விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்து வருகிறது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்க கடந்த வருடம் பஃப் டு பிளேஸிஸ் தலைமையில் களமிறங்கி லீக் சுற்றில் அசத்தலாக செயல்பட்ட பெங்களூரு மீண்டும் பிளே ஆப் சுற்றில் தோல்வியை சந்தித்து ஏமாற்றத்துடன் வெளியேறியது. இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக் கொண்டு இந்த வருடம் கோப்பையை வெல்ல போராட காத்திருக்கும் அந்த அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி முழுமையான பார்முக்கு திரும்பியுள்ளது பலமாக மாறியுள்ளது.
ரசிகர்கள் மகிழ்ச்சி:
மேலும் தினேஷ் கார்த்திக், ஒருநாள் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பவுலராக திகழும் முகமது சிராஜ் ஆகியோரும் தற்சமயத்தில் நல்ல பார்மில் இருந்து அந்த அணிக்கு பெரிய பலத்தை சேர்க்கிறார்கள். அது போக கடந்த டிசம்பர் மாதம் நடந்த ஏலத்தில் தேவையற்ற வீரர்களை கழற்றி விட்ட பெங்களூரு அணி இங்கிலாந்தைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் வில் ஜேக்ஸை 3.2 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கியது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 தொடரின் போது காயமடைந்த அவர் ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
🚨 NEWS 🚨
Michael Bracewell joins Royal Challengers Bangalore as a replacement for Will Jacks.
Details 👇 #TATAIPL https://t.co/rXQlYkJo9N pic.twitter.com/aVmbIjntEw
— IndianPremierLeague (@IPL) March 18, 2023
இந்நிலையில் அவருக்கு பதிலாக நியூசிலாந்தை சேர்ந்த சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெலை 1 கோடி என்ற அடிப்படை விலைக்கு வாங்கியுள்ளதாக பெங்களூரு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தியாவின் சூரியகுமார் யாதவ் போல தாமதமாக 30 வயதுக்கு மேல் கடந்த வருடம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும் மிடில் ஆர்டரில் அதிரடியாக ரன்களை குவிக்கும் திறமை கொண்டுள்ள அவர் முக்கிய நேரத்தில் பந்து வீசி விக்கெட்டுகளை எடுத்து வெற்றியை மாற்றக்கூடியவராகவும் செயல்பட்டு வருகிறார்.
குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா நிர்ணயித்த 350 ரன்களை துரத்தும் போது 131/6 என சரிந்த நியூசிலாந்தை மிட்சேல் சாட்னருடன் இணைந்து காப்பாற்ற போராடிய அவர் வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்து கடைசி ஓவரில் அவுட்டானார். அப்போட்டியில் நியூசிலாந்து வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றாலும் 12 பவுண்டரி 10 மெகா சிக்சர்களை பறக்க விட்டு சதமடித்து 140 (78) ரன்களை 179.49 என்ற சிறப்பான ஸ்கை ரேட்டில் வெளுத்து வாங்கிய அவர் இந்தியாவுக்கு தோல்வி பயத்தை காட்டியதாக இந்திய ரசிகர்களே மனதார பாராட்டினார்கள்.
ஆனால் அப்படிப்பட்ட அவரை கடந்த டிசம்பரில் நடைபெற்ற ஏலத்தில் எந்த அணியும் வாங்காதது ஏமாற்றத்தை கொடுப்பதாக இந்திய ரசிகர்களே தெரிவித்தனர். அந்த நிலையில் காயமடைந்த இங்கிலாந்து வீரருக்கு பதிலாக தரமும் திறமையும் கொண்ட அவரை 1 கோடி என்று குறைந்த விலைக்கு பெங்களூரு அணி நிர்வாகம் வாங்கியுள்ளது அந்த அணி ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
இதையும் படிங்க:IND vs AUS : இவருக்கு இதான் கரெக்ட் – ஏபிடி, மைக்கேல் பெவனுக்கு நிகராக அசத்தி வரும் ராகுல் – ரசிகர்கள் வியப்பு
இதனால் ஏற்கனவே கிளன் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோரால் ஓரளவு வலுவாக இருக்கும் பெங்களூரு அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் துறை அவரது வருகையால் மேலும் பலமடைந்துள்ளது என்று உறுதியாக சொல்லலாம். இதை தொடர்ந்து நடைபெறும் ஐபிஎல் தொடரில் பெங்களூரு தங்களுடைய முதல் போட்டியில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி சின்னசாமி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.