அயர்லாந்தை நசுக்கிய நியூஸிலாந்து – ஹாட்ரிக் எடுப்பதில் அரிதான உலகசாதனை படைத்த நியூசி வீரர்

IRE vs NZ icheal Bracewell
- Advertisement -

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அங்கு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முறையே 1 விக்கெட், 3 விக்கெட், 1 ரன் என கடுமையாக போராடிய அயர்லாந்தின் நெஞ்சை உடைக்கும் அளவுக்கு அடுத்தடுத்த தோல்விகளை சொந்த மண்ணில் பரிசளித்த நியூசிலாந்து 3 – 0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து கோப்பையை வென்று அசத்தியது. அதன்பின் துவங்கிய 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 31 ரன் வித்தியாசத்தில் வென்ற அந்த அணி 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே தொடரில் முன்னிலை பெற்றது.

அந்த நிலைமையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2-வது போட்டி ஜூலை 20-ஆம் தேதியான நேற்று பெல்பாஸ்ட் நகரில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்து 179/4 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே அதிரடி காட்டிய பின் ஆலன் 35 (20) ரன்களில் ஆட்டமிழக்க மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த மார்டின் கப்டில் 11 (17) ரன்களில் அவுட்டானார். அந்த சமயத்தில் களமிறங்கிய கிளென் பிலிப்ஸ் அதிரடியாக 23 ரன்களும் டார்ல் மிட்செல் 14 (10) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

சொதப்பிய அயர்லாந்து:
இருப்பினும் 3-வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாகவும் அதிரடியாகவும் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய டேன் க்ளேவர் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 78* (55) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அயர்லாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக க்ரைக் எங் மற்றும் ஜோசுவா லிட்டில் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். அதை தொடர்ந்து 180 என்ற இலக்கை துரத்திய அயர்லாந்துக்கு நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீரர் பால் ஸ்டெர்லிங் 21 (15) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து களமிறங்கிய கெரத் டிலானி கோல்டன் டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார்.

போதாகுறைக்கு அடுத்து வந்த ஹேரி டெக்டர் 2 (3) ரன்களில் ரன் அவுட்டாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ஆண்டி பால்பிரிண் 10 (11) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார். அதனால் 41/4 என்ற படுமோசமான தொடக்கத்தை பெற்ற அயர்லாந்துக்கு குர்ட்டிஸ் கம்பேர் 14 (14) லோர்கன் டூக்கர் 2 (7) ஜார்ஜ் டோக்ரெல் 0 (1) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நியூசிலாந்தின் தரமான பந்து வீச்சில் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் நடையை கட்டினர்.

- Advertisement -

ப்ரெஸ்வெல் ஹாட்ரிக்:
அதனால் 54/7 என என மொத்தமாக சரிந்த அந்த அணியின் தோல்வியும் உறுதியானது. அப்போது 14-வது ஓவரை வீசுவதற்கு அப்போட்டியில் முதல் முறையாக நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் வந்தார். அதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த மெக்கார்த்தி அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். அந்த நிலைமையில் 3-வது பந்தை எதிர்கொண்ட மார்க் அடைர் 27 (22) ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்திலேயே 11 (8) ரன்கள் எடுத்திருந்த பேரி மெக்கார்த்தியும் அவுட்டாக அதற்கு அடுத்த பந்தில் அடுத்து களமிறங்கிய க்ரைக் எங் கோல்டன் டக் அவுட்டானார்.

அதனால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த மைக்கேல் ப்ரெஸ்வெல் அந்த போட்டியில் மொத்தமாக வீசிய வெறும் 5 பந்துகளில் அயர்லாந்தின் கடைசி 3 விக்கெட்டுகளை எடுத்து அந்த அணியின் கதையை மொத்தமாக முடித்தார். அதனால் 13.5 ஓவரில் 91 ரன்களுக்கு சுருண்ட அயர்லாந்து 88 ரன்கள் வித்தியாசத்தில் படு தோல்வியை சந்தித்தது. அதனால் 2 – 0* (3) என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றிய நியூசிலாந்து அயர்லாந்துக்கு அதன் சொந்த மண்ணில் தலைநிமிர கொஞ்சமும் கருணை காட்டாமல் இந்த சுற்றுப்பயணத்தில் மொத்தமாக அடித்துள்ளது.

- Advertisement -

உலகசாதனை:
முன்னதாக இந்த அயர்லாந்து டி20 தொடரில் முதல் முறையாக அறிமுகமான நியூசிலாந்தின் மைக்கேல் பிரேஸ்வெல் முதல் போட்டியில் பந்து வீசாத நிலைமையில் 2-வது போட்டியில் 91/7 என்ற நிலைமையில் அயர்லாந்து தவித்த போது முதல் முறையாக பந்துவீசி முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக “சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் கரியரின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் எடுத்த முதல் பவுலர்” என்ற அரிதான உலக சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் டி20 கிரிக்கெட் வரலாற்றில் விளையாடிய எந்த பவுலரும் தங்களது கரியரின் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்தது கிடையாது.

இதையும் படிங்க : லண்டனில் க்ளாஸ் காட்டிய புஜாரா – முஹமது அசாருதினை முந்தி 125 வருடங்களுக்கு பின் அபார சாதனை

மேலும் ஜெகப் ஓரம் (2006), டிம் சௌதீ (2010) ஆகியோருக்கு பின் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 3-வது நியூசிலாந்து பவுலர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். முன்னதாக இந்த சுற்றுப்பயணத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது அதை வெற்றிகரமாக அடித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கடைசி ஓவரில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற உலக சாதனையும் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement