லண்டனில் க்ளாஸ் காட்டிய புஜாரா – முஹமது அசாருதினை முந்தி 125 வருடங்களுக்கு பின் அபார சாதனை

Cheteswar Pujara 170 County
- Advertisement -

இந்திய டெஸ்ட் அணியில் கடந்த 10 வருடங்களாக ஜாம்பவான் ராகுல் டிராவிட்டுக்கு பின் அவரைப் போலவே பொறுமையின் சிகரமாக பேட்டிங் செய்து நிறைய வெற்றிகளை பெற்றுக்கொடுத்த மூத்த வீரர் செட்டேஸ்வர் புஜாரா கடந்த 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக கடுமையான விமர்சனங்களைச் சந்தித்து கடந்த ஜனவரியில் சொந்த மண்ணில் நடந்த இலங்கை தொடரில் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த நிலைமையில் நடைபெற்ற ரஞ்சி கோப்பையிலும் பெரிய ரன்கள் எடுக்க தவறிய அவரை ஐபிஎல் 2022 தொடரிலும் எந்த அணியும் வாங்கவில்லை. அதனால் பின்னடைவை சந்தித்த அவர் இந்திய அணிக்குள் நுழைவதற்காக வேறு வழியே தெரியாமல் இங்கிலாந்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அதை தொடர்ந்து அத்தொடரில் பங்கேற்ற அவர் 6, 201*, 109, 12, 203, 16, 170, 3, 46 என 2 சதங்கள் 2 இரட்டை சதங்கள் உட்பட 766 ரன்களை வெளுத்து வாங்கி முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பினார். அதனால் அதிரடியாக நீக்கிய அதே தேர்வுக்குழு மீண்டும் தாமாக முன்வந்து சமீபத்திய இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வு செய்தது. அதில் முதல் இன்னிங்சில் 13 ரன்களில் அவுட்டான அவர் 2-வது இன்னிங்சில் 66 ரன்கள் குவித்து வெற்றிக்காக முடிந்த அளவுக்கு போராடினார்.

- Advertisement -

இரட்டை சதம்:
இருப்பினும் ரிஷப் பண்ட் (57 ரன்களை) தவிர எஞ்சிய பேட்ஸ்மேன்கள் கைகொடுக்க தவறியதால் இந்தியா தோல்வியை சந்தித்து தொடரை சமன் செய்தது. அந்த நிலைமையில் தொடர்ந்து இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள அவர் கவுண்டி சாம்பியன்ஷிப் 2022 சீசனின் 2-வது பாகத்தில் சசக்ஸ் அணிக்காக விளையாட துவங்கியுள்ளார்.
அதில் புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூலை 19இல் துவங்கிய மிடில்சக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் டாம் ஹாலண்ட் காயத்தால் விலகியதால் இதர இங்கிலாந்து வீரர்கள் இருந்தபோதிலும் புஜாராவின் அனுபவத்தை மதித்த சசக்ஸ் அணி நிர்வாகம் அவரை தங்களது கேப்டனாக அறிவித்தது. அந்த நிலைமையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற மிடில்சக்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய சசக்ஸ் அணிக்கு அலி ஓர் 7, டாப் கிளார்க் 33 என தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினர்.

அப்போது அடுத்ததாக களமிறங்கிய டாப் அஸ்லோப் – புஜாரா ஆகியோர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 219 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுத்தார்கள். அதில் டாப் அஸ்லோப் 15 பவுண்டரியுடன் சதமடித்து 135 ரன்களில் ஆட்டமிழந்தாலும் ஏற்கனவே பொறுப்புடன் விளையாடிய கூடிய புஜாரா கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்ததால் மேலும் பொறுப்புடன் நங்கூரமாக நின்று மிடில்சக்ஸ் பவுலர்களை அற்புதமாக எதிர்கொண்டார்.

- Advertisement -

முதல் நாளிலேயே சதமடித்த அவர் நேற்றைய 2-வது நாளிலும் அபாரமாக பேட்டிங் செய்து 21 பவுண்டரி 3 சிக்சருடன் இரட்டை சதமடித்து 231 (403) ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். அதனால் அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்களை எடுக்கவில்லை என்றாலும் சசக்ஸ் தனது முதல் இன்னிங்சில் 533 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய மிடில்சக்ஸ் 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 103/0 ரன்களுடன் விளையாடி வருகிறது.

வரலாற்று சாதனைகள்:
முன்னதாக இந்த சீசனில் 201*, 203 என ஏற்கனவே 2 இரட்டை சதங்களை அடித்துள்ள புஜாரா தற்போது 3-வது இரட்டை சதத்தை அடித்துள்ளார். இதன் வாயிலாக கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் 3 இரட்டை சதங்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1991, 1994 ஆகிய ஆண்டுகளில் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் 2 இரட்டை சதங்கள் அடித்திருந்ததே முந்தனையை சாதனையாக இருந்தது.

- Advertisement -

மேலும் சசக்ஸ் அணிக்காக கவுண்டி சாம்பியன்ஷிப் வரலாற்றில் 118 வருடங்கள் கழித்து ஒரு சீசனில் 3 இரட்டை சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற வரலாற்றுப் பெருமையையும் புஜாரா பெற்றார். அத்துடன் கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் முதல்தர கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடிக்கும் முதல் இந்திய அணி வீரர் என்ற வரலாற்றுச் சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 125 வருடங்களுக்கு முன்பாக அதாவது 1897இல் எம்சிசி அணிக்கு எதிராக இந்தியாவை சேர்ந்த ரஞ்சித்சிங்ஜி 260 ரன்கள் குவித்திருந்தார்.

இதையும் படிங்க : IND vs WI : நாளைய முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

ஆனால் அவர் இங்கிலாந்துக்காக விளையாடிய போது தான் அந்த இரட்டை சதத்தை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அளவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க இரட்டை சதமடித்த அவரை லண்டன் லார்ட்ஸ் மைதான பால்கனியில் இருந்து சக அணி வீரர்களும் மைதானத்தில் இந்த ரசிகர்களும் கைதட்டி பாராட்டினர்.

Advertisement