சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த வீரராக இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை 15921 ரன்கள் அடித்திருக்கும் அவர் ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள் அடித்துள்ளார். அது தவிர்த்து இந்திய அணிக்காக ஒரே ஒரு டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களையும் அடித்துள்ளார். இப்படி சர்வதேச போட்டிகளில் அதிக டெஸ்ட் ரன்களை அடித்த வீரராகவும், அதிக ஒருநாள் ரன்களை அடித்த வீரராகவும் இருக்கும் சச்சின் 100 சதங்களையும் விளாசியுள்ளார்.
சச்சினின் சாதனையை நான் முறியடித்திருப்பேன் : மைக்கல் ஹஸி
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை பொறுத்த வரை தன் வசம் பல்வேறு சாதனைகளை வைத்திருக்கும் சச்சின் வளர்ந்து வரும் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தானும் சர்வதேச போட்டிகளில் விரைவாக அறிமுகமாகி இருந்தால் சச்சினை விட 5000 ரன்கள் கூடுதலாக அடித்திருப்பேன் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான மைக்கல் ஹஸி சில கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்காக கடந்த 2004-ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் அறிமுகமான மைக்கல் ஹஸி 2013 ஆம் ஆண்டு வரை 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6235 ரன்களையும், 185 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5442 ரன்களையும், 38 டி20 போட்டிகளில் விளையாடி 721 ரன்களையும் குவித்துள்ளார்.
இந்நிலையில் அவர் விரைவாகவே சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இருந்தால் நிறைய சாதித்திருப்பேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் என்னுடைய 28-வது வயதில்தான் சர்வதேச போட்டிகளில் அடியெடுத்து வைத்தேன்.
சச்சினை போல ஒரு பத்து ஆண்டுகள் முன்பே நான் ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இருந்தால் அவரை விட 5000 ரன்கள் அதிகமாக அடித்திருப்பேன். அதோடு சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள், அதிக சதம், அதிக ஆசஷ் வெற்றி, அதிக உலகக்கோப்பை என அனைத்திலுமே முன்னிலையில் இருந்திருப்பேன்.
இதையும் படிங்க : ரவீந்திர ஜடேஜாவிற்கு நிச்சயம் அந்த வாய்ப்பு கிடைக்கும்.. கவலைப்படாதீங்க – ரவி சாஸ்திரி ஆதரவு
ஆனால் துரதிஷ்டவசமாக எதுவும் அமையவில்லை என்று மைக்கல் ஹஸி கூறியுள்ளார். அவர் கூறியது போலவே தாமதமாக சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் 324 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் 12,398 ரன்களை குவித்து அசத்தியுள்ளார். அதுமட்டும் இன்றி உள்ளூர் போட்டிகளிலும் 23000 ரன்களுக்கு மேல் அவர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



