இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அந்த வகையில் நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இடம் பிடித்திருந்த ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை.
2027 உலககோப்பை தொடரில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவார் : ரவி சாஸ்திரி
இதன் காரணமாக இனி ரவீந்திர ஜடேஜா இந்திய ஒருநாள் அணியில் நீடிப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதோடு ஜடேஜாவின் நீக்கம் குறித்து பேசியிருந்த அஜித் அகார்கர் கூறுகையில் : தற்போதைய இந்திய அணியில் ஏற்கனவே அக்சர் பட்டேல் இருப்பதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா சேர்க்கப்படவில்லை என்று கூறியிருந்தார்.
இதன் காரணமாக ரவீந்திர ஜடேஜா இனி ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பில்லை என்று பலரும் பேசி வருகின்றனர். ஆனால் சமீபகாலமாகவே டெஸ்ட் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் ஜடேஜா எதிர்வரும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை தொடரிலும் நிச்சயம் இடம் பெறுவார் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதே அனைவரும் 2027 உலக கோப்பை தொடர் குறித்து பேசி வருகிறார்கள். அப்படி அடுத்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெற மாட்டார் என்று யாரும் எண்ணிவிடாதீர்கள். அவர் திறமை குறித்த கவலை யாருக்கும் வேண்டாம்.
ஜடேஜா தற்போதும் மிகச் சிறப்பாக பேட்டிங், பீல்டிங் மற்றும் பௌலிங் என அனைத்தையும் செய்கிறார். அதிலும் குறிப்பாக இளம் வீரர்களை விட ஃபீல்டிங்கில் சுறுசுறுப்பாக இருக்கும் ஜடேஜா முழு உடற்தகுதியுடன் உள்ளார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் மூன்று போட்டிகள் மட்டுமே இருப்பதால் அவர் தேர்வு செய்யப்படாமல் போயிருக்கலாம்.
இதையும் படிங்க : மீண்டும் கேப்டனாக களத்திற்கு திரும்பும் ரிஷப் பண்ட்.. எந்த தொடரில் தெரியுமா? – விவரம் இதோ
ஆனால் என்னை பொறுத்தவரை அடுத்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஜடேஜா நிச்சயம் இடம்பிடிப்பார். அக்சர் பட்டேல் இருந்தாலும் ஜடேஜா அவருடன் சேர்ந்து உலகக் கோப்பை தொடரில் விளையாட வாய்ப்பு ஏற்படலாம் என்றும் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



