சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 27-வது லீக் போட்டியில் விளையாடியிருந்த 18 வயதான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான ஆயுஷ் மாத்ரே 13 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் அட்டகாசமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் ஆரம்பத்தில் இருந்து தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக அவதிப்பட்டார்.
ஆயுஷ் மாத்ரேவின் காயம் குறித்து பேசிய : மைக்கல் ஹசி
குறிப்பாக ரன் ஓடுவதில் பெரிய சிரமத்தை சந்தித்த அவர் ஒரு கட்டத்தில் தசைப்பிடிப்பினால் ஏற்பட்ட வலியால் மருத்துவ ஊழியர்களின் உதவியை நாடினார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மீண்டும் தொடர்ந்து பேட்டிங் செய்தார். தசைப்பிடிப்பின் வீரியம் காரணமாக அவர் நினைத்தபடி விளையாட முடியாமல் 30 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கடந்த ஆண்டு சென்னை அணிக்காக அறிமுகமான ஆயுஷ் மாத்ரே சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியிருததன் காரணமாக இந்த 2026 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரராக இடம் பிடித்து விளையாடி வருகிறார். மூன்றாம் இடத்தில் இந்த தொடரின் ஆரம்பத்தில் இருந்து அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர் இந்த காயம் காரணமாக தற்போது மிகப்பெரிய பிரச்சனையை சந்தித்துள்ளார்.
அதாவது நேற்றைய இந்த போட்டி முடிந்த பின்னர் ஆயுஷ் மாத்ரேவின் காயம் குறித்த சில முக்கிய தகவல்களை சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக்கல் ஹசி பகிர்ந்து கொண்டார். அந்த வகையில் அவர் கூறியதாவது : ஆயுஷ் மாத்ரேவின் தொடைப்பகுதியில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு தீவிரமடைந்துள்ளது. அவரது தொடைப்பகுதியில் தசைநார் கிழிவு ஏற்பட்டுள்ளது. காயம் எந்த அளவிற்கு தீவிரமானது என்பதை அறிய ஸ்கேன் செய்ய காத்திருக்கிறோம்.
இதையும் படிங்க : 6 வருஷம் 18 போட்டி.. இரண்டில் மட்டுமே வெற்றி.. அம்பலமான சி.எஸ்.கே அணியின் பலவீனம் – விவரம் இதோ
தற்போதைய நிலைமையை பார்த்தால் அவரது காயம் மிகவும் மோசமாக உள்ளது. மிகச்சிறப்பான பார்மில் இருக்கும் அவர் விளையாட முடியாமல் போனால் அது எங்கள் அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும். இருந்தாலும் இந்த ஸ்கேன் நாளை அல்லது நாளை மறுநாள் தான் மேற்கொள்ள இருக்கிறது. எனவே இரண்டு நாட்கள் கழித்து தான் என்ன நிலவரம்? என்று தெரிய வரும். ஒருவேளை அவர் விளையாட முடியவில்லை என்றால் அது மற்றொரு வீரருக்கு வாய்ப்பாக அமையும் என்றும் மைக்கல் ஹசி கூறியது குறிப்பிடத்தக்கது.



