
சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 அணியானது எதிர்வரும் 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது தலைமையின் கீழ் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருவதால் இம்முறை நிச்சயம் கோப்பையை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்பதே பலரது கருத்தாகவும் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு இந்திய அணியின் வீரர்கள் தற்போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சை துறையை விட பேட்டிங் துறை மிக பலம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதோடு சரியான ஆல்ரவுண்டர்களும் இருப்பதால் இந்திய அணியிடம் போதிய பலம் இருப்பதாக பார்க்கப்படுகிறது. அதோடு உலககோப்பை தொடருக்கு முன்னதாக கேப்டன் சூரியகுமார் யாதவும் பழைய பார்முக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரின் போது இந்திய அணிக்குள் மீண்டும் கம்பேக் கொடுத்த இஷான் கிஷன் அந்த தொடரில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தியதோடு சேர்த்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற பயிற்சி போட்டியிலும் 20 பந்துகளில் 53 ரன்களை குவித்து அசத்தினார்.
அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டி பேசியுள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான மைக்கல் கிளார்க் கூறுகையில் : கடந்த 12 மாதங்களுக்கு முன்னதாக அபிஷேக் சர்மா மூன்று விதமான போட்டிகளுக்கும் தயார் என்று நான் கூறினேன். அதற்கான தகுதியும் திறமையும் அவரிடம் இருப்பது நல்ல விஷயம் தான். அதே நேரத்தில் அவர் எல்லா வடிவத்திலும் விளையாட வேண்டிய காலம் சரியான நேரத்தில் வரும்.
இதையும் படிங்க : பனிப்பொழிவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.. அதனால் இந்த டிரெய்னிங்கை வீரர்கள் செய்யனும் – பரத் அருண் கருத்து
இந்த டி20 உலக கோப்பை தொடரை பொறுத்தவரை இந்திய அணிக்குள் இஷான் கிஷனை தேர்வு செய்து கொண்டு வந்த பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழுவினர் ஆகியோருக்கு பாராட்டுகளை சொல்லியே ஆக வேண்டும். ஏனெனில் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெரியதாக சாதிப்பார் என்றும் மைக்கல் கிளார்க் கூறியது குறிப்பிடத்தக்கது.