2021 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் வருகிற பிப்ரவரி 18ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஏலத்தின் மூலம் வீரர்களை மாற்றுவதற்கான வாய்ப்பு அனைத்து அணிகளுக்கும் உள்ளது. மொத்தம் உள்ள 61 இடங்களுக்கு 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமான தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது.
சென்னையில் 18ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஏலத்தில் இந்திய வீரர்களை தவிர பல்வேறு நாட்டு வீரர்களும் தங்களது பெயரை ஏலத்தில் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்த ஐபிஎல் ஏலத்தில் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் தனது பெயரை பதிவு செய்துள்ளார். ஏலத்தில் அவருக்கான குறைந்தபட்ச தொகை 20 லட்சம் என்று கூறப்பட்டுள்ளது.
அர்ஜுன் டெண்டுல்கரை பொறுத்தவரை கடந்த சில ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நெட் பவுலராக இருந்து வருகிறார். மேலும் கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை இந்தியன்ஸ் அணியுடன் அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றிருந்தார். அதுமட்டுமின்றி தற்போது சையது முஷ்டாக் அலி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார்.
இந்த தொடரிலும் அவர் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை. பேட்டிங்கில் மட்டுமின்றி பந்துவீச்சிலும்ரன்களை வாரி வழங்கினார். இதன் காரணமாக அவர் மீது எந்த அணியும் நாட்டம் செலுத்தாது என்று கூறப்படுகிறது. மேலும் சீனியர் லெவலில் இரண்டு போட்டிகளில் மட்டுமே அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடி உள்ளதால் அவரை எந்த அணியும் எடுப்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.
ஆனாலும் தற்போது வெளியாகியுள்ள உறுதியான தகவலின் படி மும்பை இந்தியன்ஸ் அணி வருங்காலத்தை கணக்கில் கொண்டு அர்ஜுன் டெண்டுல்கரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்து அவரை பயிற்றுவிக்க இருப்பதாக அந்த அணியின் நிர்வாகத்தரப்பில் இருந்து உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. அதனால் 20 லட்சம் அடிப்படை விலையாக இருந்தாலும் சற்று அதிகமாகவும் அவர் மும்பை அணியால் வாங்கப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.