ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 30ஆம் தேதி முள்ளான்பூரில் இரவு 7.30 மணிக்கு எலிமினேட்டர் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடங்களைப் பிடித்த குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ஜானி பேர்ஸ்டோ ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கினார்.
மறுபுறம் ரோஹித் சர்மா கொடுத்த சில கேட்ச்களை குஜராத் தவற விட்டது. அதற்கு தண்டனைக் கொடுக்கும் வகையில் குஜராத் பவுலர்களை வெளுத்து வாங்கிய ரோஹித் சர்மா தம்முடைய பங்கிற்கு ரன்களை குவித்தார். அந்த வகையில் 7 ஓவரில் 84 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி நல்ல துவக்கத்தைக் கொடுத்த போது பேர்ஸ்டோ 47 (22) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
ரோஹித் அபார சாதனை:
அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் தம்முடைய பங்கிற்கு அதிரடியாக விளையாடும் 33 (20) ரன்னில் அவுட்டானார். இந்தப் பக்கம் தொடர்ந்து அசத்திய ரோகித் சர்மா முக்கியமான நேரத்தில் அரை சதத்தை அடித்து மும்பைக்கு கை கொடுத்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 4 சிக்சருடன் 81 (50) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இந்தப் போட்டியையும் சேர்த்து ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சரித்திர சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார். மேலும் கிறிஸ் கெய்லுக்கு (357) பின் ஐபிஎல் வரலாற்றில் 300 சிக்ஸர்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இது போக ஐபிஎல் தொடரில் விராட் கோலிக்கு பின் 7000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ரோஹித் படைத்தார்.
மும்பை அசத்தல்:
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் மறுபுறம் வந்த திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு அடித்து நொறுக்கி 25 (11) ரன்னில் பெவிலியன் திரும்பினார். இறுதியில் நமன் திர் 9 (6) ரன்களில் அவுட்டானார். ஆனால் கேப்டன் ஹர்திக் பாண்டியா 3 சிக்சருடன் 22* (9) ரன்கள் குவித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.
இதையும் படிங்க: அந்த நாள் நானும் ரிட்டையராகிடுவேன்.. புரியாத பஸ்பால் இங்கிலாந்தில் இந்தியாவின் வெற்றிக்கு காத்திருக்கேன்.. பும்ரா பேட்டி
அதனால் 20 ஓவரில் மும்பை 228/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதனால் இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பை மும்பை அதிகப்படுத்தி உள்ளது. மறுபுறம் சுமாராகவே பவுலிங் செய்த குஜராத்துக்கு அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.



