இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து ஓய்வு பெற்று வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தற்சமயத்தில் கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் மட்டுமே சீனியர்களாக இருக்கிறார்கள். இந்நிலையில் தம்முடைய உடல், முயற்சிகள் ஒத்துழைக்காத நாளில் தாமும் ஓய்வு பெறுவேன் என்று ஜஸ்ப்ரித் பும்ரா தெரிவித்துள்ளார்.
2024 டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்ல உதவிய அவர் கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தனி ஒருவனாக வெற்றிக்குப் போராடினார். அதனால் தற்சமயத்தில் நம்பர் ஒன் பவுலராக திகழும் ஜஸ்ப்ரித் பும்ரா அடுத்த நடைபெறும் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைக்க காத்திருப்பதாக கூறியுள்ளார். குறிப்பாக பஸ்பால் என்ற பெயரில் அதிரடியாக விளையாடும் இங்கிலாந்தின் ஸ்டைல் சுவாரசியமானது என்றாலும் புரியாதது என பும்ரா தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெறும் நாள்:
இங்கிலாந்து அதிரடியாக விளையாடும் போது விக்கெட்டுகள் விழுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி மைக்கேல் கிளார்க் யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு. “விளையாட்டில் தனி நபர் ஒருவர் விளையாடிக்கொண்டே இருப்பது மிகவும் கடினமானது. அதை நான் நீண்ட காலம் செய்து வருகிறேன்”
“எனவே நீங்கள் முக்கியமான தொடர் மற்றும் உங்களுடைய உடல் நிலைகளை புரிந்து செயல்பட வேண்டும். உங்களுடைய உடலை பயன்படுத்துவதில் கொஞ்சம் புத்திசாலித்தனமாகவும் முக்கிய தொடர்களை தேர்ந்தெடுப்பதில் சாதூரியமாகவும் இருக்க வேண்டும். ஒரு கிரிக்கெட்டராக நான் எதையும் விட்டுச் செல்ல விரும்பவில்லை. தற்சமயத்தில் ஆம் அனைத்தும் நன்றாக செல்கிறது”
பஸ்பால் தொடருக்கு வெயிட்டிங்:
“எனக்கென்று எந்த இலக்கையும் நிர்ணயிக்கவில்லை. இருப்பினும் என்னுடைய பயணம் முடிகிறது அல்லது என்னால் முயற்சிகளைப் போட முடியவில்லை, எனது உடல் ஒத்துழைக்கவில்லை என்று உணரும் போது ஓய்வு பற்றிய முடிவை எடுப்பேன். இங்கிலாந்தில் விளையாடுவது சவாலாக இருக்கும். அங்கே டுக் பந்துகளில் விளையாடுவதை நாம் எப்போதும் விரும்பவேன்”
இதையும் படிங்க: நல்லவேளை விராட் கோலி டெஸ்டில் ரிட்டையரானதே இந்தியாவுக்கு நல்லது.. ரசிகர்கள் அதிருப்தி.. காரணம் இதோ
“அங்கே வானிலை ஸ்விங் செய்ய உதவிகரமாக இருக்கும். ஆனால் பந்து மிருதுவாக மாறிவிட்டால் சவால்கள் ஏற்படும். எனவே இங்கிலாந்தில் விளையாடுவதை நான் எப்போதும் எதிர்நோக்கி இருக்கிறேன். அவர்களுடைய விளையாடும் ஸ்டைல் ஆர்வமாக இருக்கிறது. ஆனால் அதை என்னால் அதிகம் புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் எதிரணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடும் போது ஒரு பவுலராக நீங்கள் யார் வேண்டுமானாலும் உள்ளே புகுந்து விக்கெட்டுகளை எடுக்க முடியும்” என்று கூறினார்.



