ஐபிஎல் 2024 : பும்ராவை முந்தி விராட் கோலியை தெறிக்க விடுவேன்னு சொன்ன.. அண்டர்-19 ஹீரோவை தூக்கிய மும்பை

maphaka
- Advertisement -

மார்ச் 22ஆம் தேதி துவங்கும் ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தயாராகி வருகின்றன. இதற்கிடையே கடைசி நேரத்தில் காயத்தை சந்தித்து வெளியேறிய வீரர்களுக்கு பதிலான மாற்று வீரர்களையும் அந்தந்த அணி நிர்வாகங்கள் தேர்வு செய்து வருகின்றன. அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஒப்பந்தமான ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரன்ஃடார்ப் காயத்தால் வெளியேறினார்.

அவருக்கு பதிலாக இங்கிலாந்தை சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் லுக் வுட் தேர்வு செய்யப்படுவதாக மும்பை நிர்வாகம் நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் மும்பை அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட இலங்கை வீரர் தில்சன் மதுசங்காவும் சமீபத்தில் காயத்தை சந்தித்ததால் ஐபிஎல் 2024 தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சபாஷ் முடிவு:
அவருக்கு பதிலாக தென்னாபிரிக்காவை சேர்ந்த க்வேனா மாபாக்கா தங்களுடைய அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்படுவதாக தற்போது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் கடந்த மாதம் நடைபெற்ற ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் 21 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

குறிப்பாக அந்த தொடரில் 3 போட்டிகளில் அவர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் வாயிலாக அண்டர்-19 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு தொடரில் அதிக 5 விக்கெட் ஹால் எடுத்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் படைத்தார். அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அரை இறுதி சுற்று வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் 2024 அண்டர்-19 உலகக்கோப்பை தொடரின் தொடர்நாயகன் விருதையும் வென்றார்.

- Advertisement -

அந்தளவுக்கு தரமான அவர் வருங்காலங்களில் மும்பை அணிக்காக விளையாடும் இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ராவை மிஞ்சுவேன் என்று தெரிவித்திருந்தார். அத்துடன் இந்தியாவின் ஜாம்பவானாக கருதப்படும் விராட் கோலியின் விக்கெட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் எடுப்பதே வருங்காலத்தில் தம்முடைய லட்சியம் என்றும் அவர் கூறியிருந்தார். அந்த வகையில் திறமையுடன் உயர்ந்த லட்சியத்தையும் கொண்டிருக்கும் அவரை மும்பை தற்போது வாங்கியுள்ளது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையும் படிங்க: அமித் மிஸ்ராவை போன்றே தமிழக வீரர் சிறப்பாக பந்துவீசுகிறார்.. லக்னோ அணியின் பயிற்சியாளர் அளித்த பேட்டி

இந்த சூழ்நிலையில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக திகழும் சூரியகுமார் யாதவ் காயத்தால் மும்பைக்காக ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்பது மும்பைக்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ரோகித் சர்மாவுக்கு பதிலாக புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement