அமெரிக்காவில் மேஜர் லீக் டி20 கிரிக்கெட் தொடரின் 2025 தொடர் இறுதிக்கட்டத்தை தொட்டுள்ளது. அதில் ஜூலை 12ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு டாலஸ் நகரில் குவாலிஃபயர் 2 போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் எலிமினேட்டரில் வென்ற எம்ஐ நியூயார்க் மற்றும் ஃகுவாலிபயர் 1 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டதால் வந்த டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளான மும்பை மற்றும் சென்னையின் கிளை அணிகளான அவ்விரு அணிகள் மோதிய போட்டி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டாஸ் வென்ற எம்ஐ முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டிஎஸ்கே அணி 20 ஓவரில் போராடி 166/5 ரன்களை மட்டுமே எடுத்தது.
டெக்சாஸ் போராட்டம்:
ஸ்மித் படேல் 9, முக்கமல்லா 1, சுபம் ரஞ்சனே 1, மார்கஸ் ஸ்டோய்னிஸ் 6 என அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்காமல் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 85/5 என திணறிய அந்த அணிக்கு கேப்டன் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடி அரை சதத்தை அடித்து 59 (42) ரன்னில் அவுட்டானார். கடைசி நேரத்தில் ஆக்கில் ஹொசைன் அதிரடியாக 55* (32), டோனவன் ஃபெரிரா 32* (20) ரன்கள் அடித்து ஓரளவு காப்பாற்றினார்கள்.
எம்ஐ அணிக்கு ருசில் உகர்கர் 2, ட்ரிஷ்டன் லஸ் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்து விளையாடிய எம்ஐ நியூயார்க் அணிக்கும் குயின்டன் டீ காக் 6, மைக்கேல் பிரேஸ்வெல் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர்
ஆனால் மற்றொரு துவக்க வீரர் மோனல் பட்டேல் நிதானமாக விளையாடி 49 (39) ரன்கள் குவித்து அவுட்டானார்.
காட்டடி பொல்லார்ட்:
ஆனால் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரான் – பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். அதில் சீராக அதிரடி காட்டிய பூரான் அரை சதத்தை அடித்து 52* (36) ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் காட்டுத்தனமாக அடித்து நொறுக்கிய பொல்லார்ட் 4 பவுண்டரி 3 சிக்சர்களை பறக்க விட்டு 47* (22) ரன்களை விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார்.
அதனால் 19 ஓவரிலேயே 172/3 ரன்களை எடுத்த எம்ஐ 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஃபைனலுக்கு தகுதி பெற்றது. ஐபிஎல் தொடரில் மும்பைக்காக 2013 ஃபைனலில் 60* (32), 2015 குவாலிபயர் 1இல் 41 (17), 2015 ஃபைனலில் 36 (18), 2019 ஃபைனலில் 41* (25) ரன்கள் அடித்த பொல்லார்ட் சிஎஸ்கே அணியை வீழ்த்த முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: 600 ரன்ஸ்.. இங்கிலாந்து மண்ணில் கிங் கோலியின் சாதனையை உடைத்த கில்.. ஆசிய கில்லியாக 2 புதிய சாதனை
அதே போல அமெரிக்காவிலும் சிஎஸ்கே கிளை அணியை அடித்து நொறுக்கிய அவர் மும்பை கிளையை வெற்றி பெற வைத்து ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார். இதைப் பார்க்கும் பல்தான்ஸ் ரசிகர்கள் ஐபிஎல் போல அமெரிக்காவிலும் சிஎஸ்கே அணியை மும்பை வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.



