வரலாற்றிலேயே முதல் முறை! வித்யாச முடிவால் பல்ப் வாங்கிய மும்பை, தோல்வியை பரிசளித்த பெங்களூரு

RCB vs MI Rohit Sharma
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 9-ஆம் தேதி நடந்த 18-வது லீக் போட்டியில் மும்பை மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பங்கேற்றன. புனேவில் நடந்த அப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய மும்பைக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிசான் ஆகியோர் இணைந்து பவர்பிளே ஓவர்களில் சரவெடியாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்த இந்த ஜோடியில் 15 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 26 ரன்கள் எடுத்திருந்தபோது ரோகித் சர்மா அவுட்டானார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் 8 (11) ரன்களில் அவுட்டானதும் மும்பைக்கு மாபெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சரிந்த மும்பை, காப்பாற்றிய சூர்யகுமார்:
ஏனெனில் அடுத்த ஒரு சில பந்துகளில் இசான் கிசான் 26 (28) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த இளம் வீரர் திலக் வர்மா ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி மாபெரும் அதிர்ச்சி அளித்தார். போதாக்குறைக்கு அடுத்ததாக களமிறங்கிய இளம் வீரர் ரமன்தீப் சிங் 6 ரன்களில் நடையை கட்ட 60/1 என நல்ல தொடக்கத்தை பெற்ற மும்பை 62/5 என திடீரென சரிந்தது.

- Advertisement -

அந்த இக்கட்டான சூழ்நிலையில் 4-வது இடத்தில் களமிறங்கி நங்கூரமாக நின்ற நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 6 மெகா சிக்ஸர்கள் உட்பட அரைசதம் கடந்து 68* ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் தனி ஒருவனாக மூழ்கிய மும்பையை தூக்கி நிறுத்தினார். அவரின் போராட்டத்தில் ஓரளவு மீண்டெழுந்த மும்பை 20 ஓவர்களில் 151/6 ரன்கள் என்ற சுமாரான ஸ்கோரை எடுத்தது. பெங்களூர் சார்பில் பந்துவீச்சில் மிரட்டிய ஹர்ஷல் பட்டேல் மற்றும் வணிந்து ஹஸரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

பெங்களூரு ஹாட்ரிக் வெற்றி:
அதை தொடர்ந்து 152 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் டு பிளசிஸ் மற்றும் இளம் வீரர் அனுஜ் ராவத் ஆகியோர் இணைந்து ஆரம்பம் முதலே நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதில் 16 (24) ரன்கள் எடுத்திருந்தபோது டு பிளேஸிஸ் அவுட்டாக அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் விராட் கோலி தனது பங்கிற்கு அதிரடியாக பேட்டிங் செய்து பெங்களூருவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 2-வது விக்கெட்டுக்கு 80 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருவின் வெற்றியை உறுதிசெய்த இந்த ஜோடியில் 47 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட 62 ரன்கள் எடுத்திருந்த போது இளம் வீரர் அனுஜ் ராவத் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அவருடன் அதிரடியாக 36 பந்துகளில் 5 பவுண்டரி உட்பட 48 ரன்கள் எடுத்த விராட் கோலி கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். இறுதியில் தினேஷ் கார்த்திக் 7* (2) கிளென் மேக்ஸ்வெல் 8* (2) என அதிரடியான பினிஷிங் கொடுத்ததால் 18.3 ஓவர்களில் 152/3 ரன்கள் எடுத்த பெங்களூரு 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் வாயிலாக இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளில் முதல் போட்டியை தவிர்த்து அடுத்த 3 போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றிகளை பதிவு செய்த பெங்களூரு ஹாட்ரிக் வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த சூப்பரான வெற்றிக்கு 66 ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய இளம் வீரர் அனுஜ் ராவத் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Anuj Rawat

பல்ப் வாங்கிய மும்பை:
மறுபுறம் இந்தப் போட்டியுடன் சேர்த்து இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 4 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியடைந்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக சாதனை படைத்துள்ள அந்த அணி இப்படி அடுத்தடுத்து தோல்விகளை பெற்று புள்ளிப் பட்டியலின் அடிப்பகுதியில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சியும் கவலையும் அடைய வைத்துள்ளது.

- Advertisement -

முன்னதாக இந்த போட்டியில் 2 வெளிநாட்டு வீரர்களை மட்டும் தேர்வு செய்த மும்பை வித்தியாசமான முடிவை எடுத்தது. சொல்லப் போனால் கடந்த 2008 முதல் இது போல 2 வெளிநாட்டு வீரர்களுடன் மட்டும் மும்பை களமிறங்கியது இதுவே முதல் முறையாகும். அதுவும் அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் மற்றும் தென் ஆப்பிரிக்கா அண்டர்-19 வீரர் தேவால்டு ப்ரேவிஸ் ஆகிய இருவரை மட்டும் ரோகித் சர்மா முதல் முறையாக தனது மும்பை கேப்டன்ஷிப் வரலாற்றில் தேர்வு செய்தார்.

இதையும் படிங்க : நான் விலகிக்குறேன். நீங்களே பாத்துக்கோங்க. தல தோனி எடுத்த அதிரடி முடிவு – நிர்வாகம் வரவேற்பு

ஆனால் அந்த வித்தியாசமான முடிவு இறுதியில் பல்ப் வாங்கும் வகையில் படு மோசமான தோல்வியை மும்பைக்கு பரிசளித்தது. இத்தனைக்கும் அந்த அணியில் ரிலே மெரிடித், டிம் டேவிட் போல போன்ற வெளிநாட்டு வீரர்கள் இருக்கும் போதிலும் அந்த அணி இப்படி ஒரு முடிவெடுத்தது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. ஆனால் இதிலிருந்து அந்த அணியில் உள்ள வெளிநாட்டு வீரர்கள் தரமானவராக இல்லை என்பது தெரிய வருகிறது.

Advertisement