அட போங்கய்யா ! அசத்திய ராகுலின் லக்னோ, போராடி தோற்ற மும்பை – முதல் அணியாக வெளியேறும் பரிதாபம்

MI vs LSG bumrah and KL Rahul
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஏப்ரல் 16-ஆம் தேதி 2 போட்டிகள் நடைபெற்ற நிலையில் மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 26-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோவுக்கு தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். இதில் குயின்டன் டி காக் அதிரடியாக 24 (13) ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் தொடர்ந்து மும்பை பவுலர்களைப் அதிரடியாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். 2-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் 6 பவுண்டரி உட்பட 38 (29) எடுத்திருந்தபோது மனிஷ் பாண்டே அவுட்டானார்.

கேஎல் ராகுல் அபார சதம்:
ஆனால் மறுபுறம் மும்பைக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கேஎல் ராகுல் அதிரடி சரவெடியாக மும்பை பவுலர்களை புரட்டி எடுத்து அரைசதம் கடந்தும் அவுட்டாகாமல் அடம் பிடித்தார். இவரை அவுட் செய்ய மும்பை கேப்டன் ரோகித் சர்மா போட்ட அத்தனை திட்டங்களும் தோல்வியில் முடிவடைய கடைசிவரை சொல்லி அடித்த கில்லியாக அபார சதம் அடித்த கே எல் ராகுல் 60 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 5 இமாலய சிக்சர் உட்பட 103* விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தார். அவரின் அதிரடி சதத்தால் 20 ஓவர்களில் லக்னோ 199/4 ரன்கள் குவித்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக ஜெயதேவ் உனட்கட் 2 விக்கெட்டுகளை சாய்த்தார்.

KL Rahul 103

அதன்பின் 200 என்ற இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 (7) ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்து களமிறங்கிய 18 வயது தென் ஆப்பிரிக்க இளம் வீரர் தேவால்ட் பிரேவிஸ் தமக்கே உரித்தான பாணியில் முதல் பந்தில் இருந்தே அதிரடியை காட்டினார். வெறும் 13 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 37 ரன்களை வெளுத்து வாங்கிய அவர் திடீரென ஆட்டமிழந்து ஏமாற்றினார். மறுபுறம் தடுமாற்றமாக 13 (17) ரன்கள் எடுத்த இசான் கிசானும் நடையை கட்ட 57/3 என ஆரம்பத்திலேயே மும்பை தடுமாறியது.

- Advertisement -

போராடிய மும்பை:
அந்த சரிவை சரிகட்டும் வகையில் அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூரியகுமார் யாதவ் 27 பந்துகளில் 3 பவுண்டரி உட்பட 37 ரன்களும் இளம் வீரர் லலித் யாதவ் 2 பவுண்டரி உட்பட 26 (26) ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தாலும் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்தனர்.

Marcus Stoinis 2.jpeg

அதனால் 15.3 ஓவர்களில் 127/5 என திண்டாடிய மும்பைக்கு அடுத்து களமிறங்கிய பின் ஆலன் 8 (7) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளிக்க அவருடன் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி வெற்றிக்கு போராடினார். அவருக்கு துணையாக ஜெயதேவ் உனட்கட் வெறும் 2 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 14 (6) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க மறுபுறம் போராடிக்கொண்டிருந்த பொலார்ட் 1 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உட்பட 25 (14) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றியதால் மும்பையின் தோல்வி உறுதியானது.

- Advertisement -

வெளியேறும் மும்பை:
இறுதிவரை 20 ஓவர்களில் 181/9 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணி போராடி தோல்வி அடைந்தது. லக்னோ சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக அவேஷ் கான் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இதனால் 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற லக்னோ இந்த வருடம் பங்கேற்ற 6 போட்டிகளில் 4-வது வெற்றியை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த அபார வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Mumbai Indians MI

மறுபுறம் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என சரித்திர சாதனை படைத்துள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் ஏற்கனவே இந்த வருடம் தனது முதல் 5 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்விகளை பதிவு செய்து திண்டாடியது. அந்த நிலையில் இந்தப் போட்டியில் கட்டாயம் வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் களமிறங்கிய போதும் தோல்வியை அடைந்த அந்த அணி 6-வது தோல்வியை பதிவு செய்து வரலாற்றிலேயே முதல் முறையாக தனது முதல் 6 போட்டிகளில் தோல்வியடைந்து பரிதாப சாதனை படைத்தது.

- Advertisement -

அத்துடன் இந்தத் தொடர் தோல்விகளின் வாயிலாக 2022 ஐபிஎல் தொடரின் லீக் சுற்றோடு முதல் அணியாக மும்பை வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் இந்த வருடம் 10 அணிகள் விளையாடுவதால் ஒரு அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற குறைந்தது 8 – 9 வெற்றிகள் வேண்டும். அதில் 9 வெற்றிகளைப் பெற்றால் நேரடியாகச் செல்லலாம், 8 வெற்றிகள் பெற்றால் ரன்ரேட் உதவி கட்டாயமாக தேவைப்படும். ஆனால் தற்போதைய நிலைமையில் மற்ற அனைத்து அணிகளை காட்டிலும் மும்பை படுமோசமான ரன்ரேட் பெற்றுள்ளது.

இதையும் படிங்க : 2022 ஆசிய கோப்பைக்கு சிக்கல் ! திட்டமிட்டபடி நடக்குமா? – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

ஒருவேளை அடுத்த 8 போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற்றாலும் கூட மிகப்பெரிய வெற்றிகளைப் பதிவு செய்தால் மட்டுமே ப்ளே-ஆப் சுற்றுக்கு செல்ல முடியும். ஆனால் மிகப்பெரிய ரன்ரேட்டுடன் கூடிய 8க்கு 8 என்ற வெற்றி என்பது அசாத்தியமானது என்பதால் முதல் அணியாக மும்பை வெளியேறுவது 90% உறுதியாகியுள்ளது அந்த அணி ரசிகர்களை அடப் போங்கய்ய என்பது போல் கவலையடைய வைத்துள்ளது.

Advertisement