2022 ஆசிய கோப்பைக்கு சிக்கல் ! திட்டமிட்டபடி நடக்குமா? – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ

Asia Cup
- Advertisement -

கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போல சிறந்து விளங்கும் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் கிரிக்கெட் அணிகளின் சாம்பியன் பட்டத்தை தீர்மானிக்கும் ஆசிய கோப்பை அவ்வப்போது நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். கடந்த 1983 முதல் ஒவ்வொரு 2 வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் இந்த தொடர் கடைசியாக கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற அந்த தொடரின் சாம்பியன் பட்டத்தை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்று சாதனை படைத்த நிலையில் கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற இருந்த ஆசிய கோப்பை கரோனா காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அந்த நிலையில் இந்த வருடத்திற்கான ஆசிய கோப்பை வரும் ஆகஸ்டு 27-ஆம் தேதியன்று கோலாகலமாகத் துவங்கும் என சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடைபெறுவதால் அதற்கு தயாராகும் வகையில் இந்த வருட ஆசிய கோப்பை 20 ஓவர் தொடராக நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

இலங்கையில் ஆசிய கோப்பை:
ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை நடைபெறும் இந்தத் தொடர் முழுவதும் இலங்கையில் நடைபெறும் என அறிவித்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் இதில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட டாப் 6 அணிகள் பங்கேற்கும் என தெரிவித்திருந்தது. 4 வருடங்கள் கழித்து ஆசிய கோப்பை மீண்டும் நடைபெற இருந்ததால் ஆசியாவைச் சேர்ந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்த நிலையில் இந்த தொடர் திட்டமிட்டபடி நடைபெறுவதில் மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.

asia cup

ஏனெனில் இந்த தொடர் நடைபெறுவதாக உள்ள இலங்கை நாட்டில் தற்போது மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அதை எதிர்த்து அந்த நாட்டில் உள்ள அனைத்து மக்களும் வீதிகளில் இறங்கி கடந்த ஒரு மாதங்களாகப் போராடி வருகின்றனர். அரசாங்கத்துக்கு எதிராக வெடித்துள்ள இந்த மிகப்பெரிய மக்கள் புரட்சியில் இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கூட பங்கேற்று வருகின்றனர். ஆனால் இதுவரை அந்தப் போராட்டம் முடிவடைவதற்குண்டான எந்த அறிகுறிகளும் தெரியாத காரணத்தால் ஆசிய கோப்பை அங்கு நடைபெறுமா என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

விரைவில் முடிவு:
இந்நிலையில் ஆசிய கோப்பை நடைபெற உள்ள இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை பற்றி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பேசியது பின்வருமாறு. “தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை கிரிக்கெட்டில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுடன் நான் பேசியுள்ளேன். அதில் ஆசிய கோப்பையை பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்துவோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுபற்றி வரும் மே 29-ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் 2022 இறுதிப் போட்டி முடிந்த பின் இலங்கை கிரிக்கெட் வாரிய அதிகாரிகளுடன் மேலும் பேச்சுவார்த்தை சூழ்நிலைக்கு தகுந்தார் போல் முடிவெடுக்கப்படும்” என கூறினார்.

Jay-shah

ஆசிய கோப்பை 2022 தொடரை வரும் ஆகஸ்ட் மாதம் தான் இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் அதற்குள் நிலைமை சரியாகிவிடும் என அந்நாட்டு கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் உறுதி அளித்துள்ளதாக ஜெய் ஷா தெரிவித்தார். இது பற்றி தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் பைனல் முடிந்த பின் மீண்டும் ஒருமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அதே சமயம் எது எப்படி இருந்தாலும் போராட்டமே நடைபெற்றாலும் கூட திட்டமிட்டபடி ஆசிய கோப்பையை தங்கள் நாட்டில் பாதுகாப்பாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி தருகிறோம் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளதாக தெரிய வருகிறது.

- Advertisement -

ஒரு வேளை இலங்கையில் தற்போது நிலவும் போராட்டம் இதேபோல் நீடிக்கும் பட்சத்தில் ஆசிய கோப்பை 2022 தொடரை வங்கதேசம் உள்ளிட்ட வேறு ஏதேனும் ஆசிய கண்டத்தை சேர்ந்த நாட்டிற்கு மாற்றுவதற்கும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தயாராக உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் ஏற்கனவே 2020 ஆசிய கோப்பை ரத்து செய்யப்பட்டதால் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு காரணத்திற்காக அதுபோன்றதொரு இழப்பை சந்திக்க விரும்பவில்லை.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் ரசிகர்களிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்ட தீபக் சாகர் – எதற்கு தெரியுமா?

எனவே அதுபோன்ற ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற அதே ஐக்கிய அரபு நாடுகளில் இந்த வருட ஆசிய கோப்பையை வெற்றிகரமாக நடத்தி முடிக்க ஆசிய கிரிக்கெட் கவுன்சில் திட்டமிட்டுள்ளது.

Advertisement