தெ.ஆ மற்றும் துபாய் டி20 தொடரில் தங்களது புதிய அணிகளின் பெயரை அறிவித்த மும்பை, சென்னை, டெல்லி, கொல்கத்தா நிர்வாகங்கள் – லிஸ்ட் இதோ

MI vs CSK Ms Dhoni Rohit Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் கடந்த 2008இல் துவங்கப்பட்ட ஐபிஎல் டி20 தொடர் கடந்த 15 வருடங்களில் புதிய பரிணாமங்களை கண்டு யாருமே எதிர்பாராத பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டி இன்று உலகின் நம்பர் ஒன் டி20 தொடராக உருவெடுத்துள்ளது. அந்த வகையில் இந்த வருடம் 10 அணிகளுடன் 74 போட்டிகள் கொண்ட தொடராக விரிவடைந்துள்ள ஐபிஎல் வரும் 2025 முதல் 94 போட்டிகள் கொண்ட தொடராக மேலும் விரிவடைய உள்ளது. ஐபிஎல் வளர்ச்சியை போலவே அதில் அணிகளை வாங்கியுள்ள நிர்வாகங்களும் கடந்த 15 வருடங்களில் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளன.

அதனால் தங்களது நிர்வாகத்தை மேலும் வளர்க்க நினைக்கும் அதன் உரிமையாளர்கள் வெஸ்ட் இண்டீஸ் போன்ற வெளிநாட்டு டி20 தொடரில் தங்களது கிளை அணிகளை வாங்கியுள்ளனர். அந்த வரிசையில் இந்த வருடம் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் புதிதாக உருவாக்கியுள்ள டி20 தொடர்களில் ஐபிஎல் அணி நிர்வாகங்கள் புதிய அணிகளை வாங்கியுள்ளன.

- Advertisement -

புதிய தொடர்கள்:
ஐக்கிய அரபு நாடுகள் புதிதாக உருவாகியுள்ள டி20 தொடருக்கு “சர்வதேச லீக் டி20” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த தொடரில் 6 அணிகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அதில் சாருக்கான் தலைமையிலான கொல்கத்தா ரைடர்ஸ் நிர்வாகம், டெல்லி கேப்பிடல் அணியின் ஜிஎம்ஆர் குரூப், அதானி நிர்வாகம், மும்பை இந்தியன்ஸ் அணியின் ரிலைன்ஸ் ஆகிய 4 இந்திய நிர்வாகங்கள் 4 அணிகளை வாங்கியுள்ளன. அதேபோல் டி20 சேலஞ்ச் என்ற பெயரில் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உருவாக்கியுள்ள புதிய தொடரில் பங்கேற்கும் 6 அணிகளையும் மும்பை, சென்னை, ராஜஸ்தான், டெல்லி ஹைதராபாத் மற்றும் லக்னோ ஆகிய 6 ஐபிஎல் அணி நிர்வாகங்கள் மொத்தமாக வளைத்துப் போட்டுள்ளன.

இந்த 2 தொடர்களும் வரும் 2023 ஜனவரியில் ஒரே நேரத்தில் இரு நாடுகளிலும் நடைபெற உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த தொடரில் இந்திய வீரர்கள் விளையாடுவார்களா என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது. இந்த நிலைமையில் இந்த இரு தொடர்களிலும் அணிகளை வாங்கியுள்ள ஐபிஎல் அணி நிர்வாகங்கள் அதற்கான பெயர்கள், அதில் விளையாடப் போகும் வீரர்கள் போன்ற முக்கிய முடிவுகளை எடுத்து வருகின்றன.

- Advertisement -

அணிகளின் பெயர்கள்:
மும்பை: அந்த நிலைமையில் இந்த 2 டி20 தொடர்களிலும் பங்கேற்கும் தங்களது அணிகளின் பெயர்களை மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அதில் தென் ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரை மையமாக வைத்து வாங்கியுள்ள தங்களது அணிக்கு “எம்ஐ கேப் டவுன்” என்ற பெயரை வைத்துள்ள அந்த அணி நிர்வாகம் துபாயில் நடைபெறும் டி20 தொடரில் வாங்கியுள்ள அணிக்கு “எம்ஐ எமிரேட்ஸ்” என்ற பெயரை சூட்டியுள்ளதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளது.

ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணியாக திகழ்வதை போல இந்த தொடர்களிலும் தங்களது அணி வெற்றி வாகை சூடி வெற்றிகரமான அணிகளாக திகழும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

- Advertisement -

டெல்லி: அதேபோல் ஐபிஎல் தொடரில் 2008 முதல் டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடி வந்த தங்களது அணியை 2019இல் டெல்லி கேப்பிடல்ஸ் என மாற்றி புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தி சமீப காலங்களில் வெற்றி நடை போட்டு வரும் டெல்லி அணி நிர்வாகமும் தங்களது புதிய டி20 அணிகளின் பெயரை வெளியிட்டுள்ளது.

அரபு நாடுகளில் பெரிய நகரமான துபாயை மையப்படுத்தி வாங்கியுள்ள தங்களது அணிக்கு “துபாய் கேபிட்டல்ஸ்” என பெயரிட்டுள்ள அந்த அணி நிர்வாகம் தென்ஆப்பிரிக்காவில் பிரிட்டோரியா நகரை மையப்படுத்தி வாங்கியுள்ள அணிக்கு “பிரிடோரியா கேபிட்டல்ஸ்” என்ற பெயரை வைத்துள்ளதாக தனது டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கொல்கத்தா: ஏற்கனவே வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் அணியை வைத்துள்ள கொல்கத்தா அணி நிர்வாகம் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரில் அணியை வாங்காத நிலையில் துபாய் டி20 தொடரில் புதிய அணியை வாங்கியுள்ளது. அபுதாபி நகரை மையப்படுத்திய அந்த அணிக்கு “அபுதாபி நைட் ரைட்ர்ஸ்” என பெயரிடப்பட்டுள்ளது.

சென்னை: முதல் முறையாக ஒரு வெளிநாட்டு தொடரில் அணியை வாங்கியுள்ள சென்னை நிர்வாகம் தென் ஆப்ரிக்காவின் ஜொகனஸ்பர்க் நகரை மையப்படுத்திய டி20 அணிக்கு “ஜோகனஸ்பர்க் சூப்பர் கிங்ஸ்” அல்லது “ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்” என்ற பெயரை வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Advertisement