பழைய பவர் இல்ல! எப்படி வெற்றி கிடைக்கும் – மும்பை தடுமாறுவதன் காரணத்தை கூறும் நட்சத்திர முன்னாள் வீரர்

Mumbai Indians MI
- Advertisement -

மிகுந்த விறுவிறுப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற முதல் 3 போட்டிகளிலும் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து ஹாட்ரிக் தோல்விகளை பெற்றதால் அந்த அணி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனெனில் 5 கோப்பைகளை வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பைக்கு அத்தனை கோப்பைகளை வாங்கி கொடுத்த ரோகித் சர்மா தான் இந்த வருடமும் கேப்டன்ஷிப் செய்து வருகிறார்.

Mi

- Advertisement -

அந்த நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மோசமான பேட்டிங் மற்றும் அதைவிட படு மோசமான பவுலிங் ஆகியவற்றால் அந்த அணி அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தது. தற்போதைய நிலைமையில் புள்ளிப் பட்டியலில் 9-வது இடத்தில் திண்டாடும் அந்த அணி இதிலிருந்து மீண்டெழுந்து எப்படி கோப்பையை வெல்லப்போகிறது என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது.

சொதப்பிய டேனியல் சாம்ஸ்:
முன்னதாக இந்த தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவுக்கு எதிராக தனது 3-வது போட்டியில் களமிறங்கிய மும்பை பேட்டிங்கில் தட்டுத்தடுமாறி சூர்யகுமார் யாதவ் உதவியுடன் 161 ரன்கள் எடுத்தது. அதை தொடர்ந்து பந்து வீச்சிலும் சொதப்பிய அந்த அணி பரிதாபமாக தோல்வி அடைந்தது.

Pat Cummins Daniel Sams MI vs KKR

அதிலும் கடைசி 30 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற நிலையில் 16-வது ஓவரை ஆஸ்திரேலியாவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் டேனியல் சாம்ஸ் வீச அதை எதிர் கொண்ட மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் 6, 4, 6, 6, 3 (நோ பால்), 4, 6 என ஒரே ஓவரில் 35 ரன்களையும் தெறிக்க விட்டு மும்பைக்கு அதிர்ச்சி கொடுத்தார். குறைந்தது 19-வது வரை சென்றிருக்க வேண்டிய அந்தப் போட்டி டேனியல் சாம்ஸ் மோசமாக பந்து வீசியதன் காரணமாக 16-வது ஓவரிலேயே முடிந்தது. அத்துடன் அந்த ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கிய அவர் ஐபிஎல் வரலாற்றில் ஒரு ஓவரில் 30க்கும் மேற்பட்ட ரன்களை கொடுத்த முதல் மும்பை பந்துவீச்சாளர் என்ற அவப்பெயரை மும்பைக்கு ஏற்படுத்தினார்.

- Advertisement -

பெஞ்ச் பலமாக இல்லை:
அதன் காரணமாக அடுத்த போட்டியில் அவரை நீக்க வேண்டும் என மும்பை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இந்நிலையில் ஒரே ஓவரில் வெற்றியை தாரை வார்த்த டேனியல் சாம்ஸ்க்கு பதில் யாருக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்பதைப் பற்றி முன்னாள் இந்திய நட்சத்திர அதிரடி வீரர் வீரேந்திர சேவாக் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது போன்ற தருணங்களில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்படவில்லை என்றாலோ காயமடைந்தாலோ அவருக்கு பதிலாக விளையாட கடந்த வருடம் வரை நேதன் கவுண்டர்-நைல் இருந்தார். ஆனால் தற்போது உள்ள மும்பை அணியின் பெஞ்சை பார்க்கும்போது அதில் அமர்ந்திருக்கும் வீரர்களில் யாரை விளையாடும் 11 பேர் அணியில் சேர்க்கலாம் என ஒன்றுக்கு 2 முறை யோசிக்க வேண்டிய நிலைமை அந்த அணி நிர்வாகத்துக்கு ஏற்ப்பட்டுள்ளது. ஜெயதேவ் உனட்கட், ரிலே மெரிடித், அர்ஷத் கான், சஞ்சய் யாதவ், ரித்திக் ஷோக்கின், அர்ஜுன் டெண்டுல்கர் என அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் எந்த ஒரு வீரரும் பேசில் தம்பி அல்லது டேனியல் சாம்ஸ் போன்றவர்களுக்கு மாற்றாக களமிறங்கும் அளவுக்கு இல்லை” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல பேசில் தம்பி அல்லது டேனியல் சாம்ஸ் ஆகியோரில் யாரையாவது அடுத்த போட்டியில் மாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள மும்பை அதற்கு ஏற்ற வீரர்கள் பெஞ்சில் இல்லாமல் தவிக்கிறது. கடந்த வருடம் வரை அந்த இடத்தில் கவுன்டர்-நைல் இருந்ததாக கூறும் சேவாக் தற்போது அது போன்ற தரமான வீரர்கள் மும்பையின் பெஞ்சில் இல்லை என்று கூறியுள்ளார்.

MI

எப்படி வெற்றிபெற முடியும்:
“அதில் கடந்த காலங்களில் புனே சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்காக ஒரு சீசனில் மட்டும் சிறப்பாக விளையாடிய ஜெய்தேவ் உனட்கட் ஓரளவு சிறப்பாக செயல்பட கூடிய அனுபவம் வாய்ந்தவராக இருக்கிறார். கடந்த வருடங்களில் 15 – 16 கோடி ரூபாய் அளவுக்கு ஏலம் போன அவர் ஒரு சீசனை தவிர்த்து ஏனைய வருடங்களில் சோபிக்கவில்லை. எனவே அவர் மட்டும்தான் பும்ராவுடன் சிறப்பாக பந்து வீசும் அளவுக்கு தகுதியானவராக உள்ளார். அவரைத் தவிர பவர்பிளே ஓவர்களில் 3 ஓவர்களை வீசும் அளவுக்கு மும்பை அணியில் வேறு யாரும் இல்லை.

- Advertisement -

எனவே இந்த வருடம் மும்பையின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் கடினமாக உழைக்க வேண்டும்” என இதுபற்றி சேவாக் மேலும் தெரிவித்தார். கடந்த வருடங்களில் அந்த அணிக்காக விளையாடிய ஹர்டிக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தின் போது கோட்டை விட்டதால் தற்போது மும்பை அணியின் பந்துவீச்சு பலவீனமாக மாறிவிட்டதாக சேவாக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : சிக்கலை சரிசெய்ய சி.எஸ்.கே பவுலர்களுக்கு ஸ்பெஷல் பிராக்டீஸ் குடுக்கும் – பவுலிங் கோச் பாலாஜி

மேலும் கடந்த வருடம் வரை அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருந்த வீரர்கள் கூட தரமானவர்களாக இருந்த நிலையில் தற்போது அந்த அணியின் பெஞ்சில் அமர்ந்திருக்கும் வீரர்கள் யாருமே பும்ராராவுடன் ஜோடியாக பந்துவீசும் அளவுக்கு இல்லை என ஏலத்தில் சொதப்பிய மும்பை அணி நிர்வாகத்தை சாடினார். எனவே இதைப் புரிந்து கொண்டு இந்த வருடம் கிடைத்துள்ள பலவீனமான பந்துவீச்சை ஈடுகட்டும் அளவுக்கு பேட்டிங்கில் மும்பை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே கோப்பையை பற்றி நினைத்து பார்க்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement