
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி ஹைதராபாத் நகரில் 41வது போட்டி நடைபெற்றது. அதில் ஹைதராபாத்துக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு துவக்க வீரர்கள் டிராவிஸ் ஹெட் 0, அபிஷேக் சர்மா 8 ரன்னில் ட்ரெண்ட் போல்ட் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள்.
இஷான் கிசான் 1, நிதிஷ் ரெட்டி 2 ரன்னில் தீபக் சஹர் வேகத்தில் நடையைக் கட்டியதால் 6 ஓவரின் முடிவில் 24/4 என ஹைதராபாத் ஆரம்பத்திலேயே தடுமாறியது. அதன் வாயிலாக நடப்பு ஐபிஎல் தொடரில் பவர் பிளே ஓவரில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற சிஎஸ்கே அணியின் மோசமான சாதனையையும் ஹைதராபாத் உடைத்தது. அந்த நிலையில் நம்பிக்கை நட்சத்திரம் ஹென்றிச் கிளாசின் அதிரடியாக விளையாடினார்.
எதிர்புறம் அன்கிட் வர்மா 12 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அபாரமாக விளையாடிய கிளாஸின் அரை சதத்தை அடித்து 71 (44) ரன்கள் குவித்து பும்ரா வேகத்தில் அவுட்டானார். அவருடன் சேர்ந்து கொஞ்சம் நிதானமாக விளையாடி அபினவ் மனோகர் 43 (37) ரன்னில் ஹிட் விக்கெட் முறையில் விக்கெட் இழந்தார். அவர்களது நல்ல ஆட்டத்தால் 20 ஓவரில் ஹைதராபாத் 143-8 ரன்கள் எடுத்தது.
மும்பைக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 4, தீபக் சஹார் விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்த விளையாடிய மும்பைக்கு ரியான் ரிக்கல்டன் 11 ரன்னில் ஜெய்தேவ் உனட்கட் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். ஆனால் நம்பிக்கை நட்சத்திரம் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வில் ஜேக்ஸ் 22 (19) ரன்னில் ஜீசன் அன்சாரி சுழலில் சிக்கினார்.
மறுபுறம் தொடர்ந்து அசத்திய ரோஹித் அரை சதத்தை அடித்தார். கடந்த போட்டியில் அரை சதத்தை அடித்த அவர் இதையும் சேர்த்து 2014க்குப்பின் 9 வருடங்கள் கழித்து அடுத்தடுத்த ஐபிஎல் போட்டிகளில் அரை சதத்தை அடித்துள்ளார். தொடர்ந்து அசத்திய ரோஹித் 8 பவுண்டரி 3 சிக்சருடன் 70 (46) ரன்னில் ஈசான் மலிங்கா வேகத்தில் அவுட்டானார்.
இதையும் படிங்க: இந்தியாவில் நடப்பது ஐபிஎல் இல்ல ஃபிக்ஸிங் லீக்.. இந்த ஆதாரம் போதாதா? முன்னாள் பாக் வீரர் பதிவு
இறுதியில் அவருடன் சேர்ந்து விளையாடிய சூரியகுமார் வெறும் 19 பந்தில் 40* ரன்களை தெறிக்க விட்டார். அதனால் 15.4 ஓவரிலேயே 146-3 ரன்களை எடுத்த மும்பை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தங்களுடைய 5வது வெற்றியை பெற்றது. மேலும் 2020க்குப்பின் 4 போட்டிகளில் தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்ற மும்பை புள்ளிப்பட்டியலில் ராக்கெட் வேகத்தில் 3வது இடத்திற்கு முன்னேறி மிரட்டியுள்ளது.