ஐபிஎல் 2025 தொடரில் மே ஒன்றாம் தேதி ராஜஸ்தானில் 50வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் மும்பைக்கு எதிராக பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை 20 ஓவரில் அதிரடியாக விளையாடி 217/2 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு 116 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபார துவக்கத்தை கொடுத்த ரியான் ரிக்கல்டன் 61 (38) ரன்கள் எடுத்தார்.
அவருடன் சேர்ந்து மறுபுறம் அசத்தலாக விளையாடிய ரோஹித் சர்மா 53 (36) ரன்கள் அடித்தார். அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா சகோதரர்களைப் போல ராஜஸ்தானை அடித்து நொறுக்கி மிகச் சரியாக தலா 48* (23) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தனர். அடுத்ததாக விளையாடிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே திணறலாக விளையாடியது.
மும்பை மிரட்டல்:
அந்த அணிக்கு ஜெய்ஸ்வால் 13, நித்திஷ் ராணா 9, கேப்டன் ரியான் பராக் 16, துருவ் ஜுரேல் 11, ஹெட்மேயர் 0 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினார்கள். அதனால் ஜோப்ரா ஆர்ச்சர் 30 ரன்கள் எடுத்தும் 16.1 ஓவரிலேயே ராஜஸ்தானை 117 ரன்களுக்கு சுருட்டி வீசிய மும்பை 100 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ராஜஸ்தானுக்கு எதிராக 2வது அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற அணியாக மும்பை சாதனை படைத்தது.
இதற்கு முன் 2021இல் சார்ஜாவில் கொல்கத்தா அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே முந்தைய சாதனை. இதுபோக ஜெய்ப்பூரில் 13 வருடங்கள் கழித்து ராஜஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக மும்பை வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2012ஆம் ஆண்டு வென்ற அந்த அணி அதன் பின் சந்தித்த 4 தொடர் தோல்விகளை நிறுத்தி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
சாதனை வெற்றி:
இது போக ஐபிஎல் தொடரில் 200க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த போட்டிகளில் தோல்வியே சந்திக்காமல் மும்பை வெற்றி நடை போடுகிறது. வரலாற்றில் 17 முறை 200 ரன்கள் அடித்த போட்டிகளில் மும்பை 17 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்த வருடம் கடைசியாக விளையாடிய 6 போட்டிகளில் மும்பை தொடர்ச்சியாக 6வது வெற்றியைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவில் இன்னுமா இது நடக்குது? சச்சினையே மிஞ்சி சூர்யவன்சி இதை செஞ்சுருக்காரு.. நாசர் ஹுசைன் வியப்பு
இதையும் சேர்த்து மொத்தம் 11 போட்டிகளில் 7 வெற்றிகளைப் பெற்றுள்ள மும்பை 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. அந்த அணியின் இந்த மிரட்டல் வெற்றிக்கு அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட் 3, கரன் சர்மா 3, ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை எடுத்து முக்கிய பங்காற்றினர். அதனால் இந்த வருடம் கோப்பை மும்பைக்கு என்று பல்தான்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.



