மகளிர் ஐபிஎல் 2024 : டெல்லியிடம் கைமீறிய த்ரில்லர் வெற்றியை கடைசி பந்தில் மும்பை பறித்தது எப்படி?

- Advertisement -

மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 2024 சீசன் பிப்ரவரி 23ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக துவங்கிய இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின. பெங்களூருவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லிக்கு ஷபாலி வர்மா 1 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த அலிஸ் கேப்சி அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 64 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீராங்கனை மற்றும் கேப்டன் மெக் லென்னிங் 31 (25) ரன்களில் அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அலிஸ் கேப்சி 9 பவுண்டரி 3 சித்தருடன் அரை சதமடித்து 75 (53) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

த்ரில்லர் வெற்றி:
அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடியாக விளையாடிய ஜெமிமா ரோட்டரிகஸ் 5 பவுண்டரி 2 சிக்சருடன் 42 (24) ரன்கள் எடுத்தார். இறுதியில் மாரிசென் காப் 16 (9) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவர்களில் டெல்லி 171/5 ரன்கள் எடுக்க மும்பை சார்பில் அதிகபட்சமாக எமிலியா கேர் மற்றும் நட் ஸ்கீவர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 172 ரன்களை துரத்திய மும்பைக்கு ஹெய்லே மேத்தியூஸ் முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார்.

இருப்பினும் யாஸ்டிகா பாட்டியா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த நட் ஸ்கீவர் 19 (17) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் நிதானமாக விளையாடிய யாஸ்திகா பாட்டியா அரை சதமடித்து 55 (34) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அப்போது வந்த எமிலியா கெர் தன்னுடைய பங்கிற்கு அதிரடியாக 3 பவுண்டரியை அடித்து 24 (18) ரன்கள் எடுத்து அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து ஹர்மன்பிரீத் அதிரடியாக விளையாடியதால் வெற்றியை நெருங்கிய மும்பைக்கு கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அலிஸ் கேப்சி வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே பூஜா வஸ்திரகர் 1 ரன்னில் அவுட்டாக அடுத்ததாக வந்த அமாஞ்சோட் கௌர் அடுத்த 2 பந்துகளில் 2, 1 ரன்கள் எடுத்தார்.

இதையும் படிங்க: அவருக்கு தெரியாம அனுப்புனேன்.. வீணாகிடுவான்னு சொன்னாங்க.. படிக்காததால் எல்லாம் மாறிடுச்சு.. ஆகாஷ் தீப் அம்மா பேட்டி

ஆனால் 5வது பந்தில் ஹர்மன்பிரீத் 55 (34) ரன்களில் அவுட்டானார். அதனால் கடைசி பந்தில் மும்பையின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டதால் டெல்லி வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அடுத்ததாக வந்த அறிமுக வீராங்கனை சஜீவன் சஜ்ஜனா கடைசி பந்தில் அட்டகாசமான சிக்ஸர் அடித்து மும்பைக்கு 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் டெல்லி சார்பில் அதிகபட்சமாக அருந்ததி ரெட்டி மற்றும் அலிஸ் கேப்சி தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் கையில் வைத்திருந்த வெற்றியைக் கோட்டை விட்டது.

Advertisement