- Advertisement -
ஐ.பி.எல்

121க்கு ஆல் அவுட்.. டெல்லி வரலாறு காணாத சாதனை தோல்வி.. ஊதித்தள்ளி பிளே ஆஃப் சென்ற மும்பை

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 21ஆம் தேதி மும்பையில் 63வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் செல்ல முடியும் என்ற நிலையில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் மோதின. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ரோஹித் 5, ரியன் ரிக்கல்டன் 25 ரன்னில் அவுட்டாகி சென்றனர்.

மிடில் ஆர்டரில் வெளுத்து வாங்கிய வில் ஜேக்ஸ் 21 (13) ரன்களை அதிரடியாக குவித்து அவுட்டானார். மறுபுறம் சூரியகுமார் ஆரம்பத்தில் நிதானமாக விளையாடினர். அவருடன் சேர்ந்து நிதானமாக விளையாட திலக் வர்மா தடுமாற்றமாகவே பேட்டிங் செய்து 27 (27) ரன்னில் விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக வந்த ஹர்திக் பாண்டியா 3 (6) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

- Advertisement -

மும்பை அபாரம்:

ஆனால் கடைசி 2 ஓவரில் பட்டாசாக விளையாடிய சூரியகுமார் அரை சதத்தை அடித்து 73* (43) ரன்கள் குவித்தார். அவருடன் சேர்ந்து கடைசி நேரத்தில் நமன் திர் 24* (8) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 20 ஓவரில் மும்பை 180/5 ரன்கள் எடுத்த நிலையில் டெல்லிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.

அடுத்து விளையாடிய டெல்லிக்கு கேஎல் ராகுல் 11, கேப்டன் டு பிளேஸிஸ் 6, அபிஷேக் போரேல் 6 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவைக் கொடுத்தனர். அதனால் 27/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய டெல்லிக்கு மிடில் ஆர்டரில் போராடிய சமீர் ரிஸ்வி 39, விப்ராஜ் நிகாம் 20 ரன்களில் அவுட்டானார்கள்.

- Advertisement -

டெல்லி சறுக்கல்:

அடுத்ததாக வந்த ஸ்டப்ஸ் 2, அசுட்டோஸ் சர்மா 18 ரன்களில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்கள். இறுதியில் அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 18.2 ஓவரிலேயே 121 ரன்களுக்கு டெல்லியை சுருட்டி வீசிய மும்பை 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதையும் சேர்த்து 13 போட்டிகளில் 8வது வெற்றியை பெற்ற மும்பை பிளே ஆஃப் சுற்றுக்கு 4வது அணியாக தகுதி பெற்றது.

இதையும் படிங்க: ஜெயித்தே ஆக வேண்டிய முக்கிய போட்டியில் இருந்து அக்சர் படேல் விலகல் – காரணம் என்ன?

அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, மிட்சேல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை எடுத்தார்கள். மறுபுறம் டெல்லி தங்களுடைய முதல் 4 போட்டிகளில் வென்று ஆரம்பத்திலேயே புள்ளிப்பட்டியலில் மேலே இருந்ததால் கண்டிப்பாக ப்ளே ஆஃப் செல்லும் என்று நம்பப்பட்டது. ஆனால் கடைசி 8 போட்டிகளில் 1 வெற்றியை மட்டுமே பெற்ற அந்த அணி பிளே ஆஃப் வாய்ப்பை தவற விட்டது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் 4 போட்டிகளில் வென்றும் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாத முதல் அணி என்ற மோசமான சாதனையை டெல்லி படைத்துள்ளது.

- Advertisement -