ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மும்பையில் 38வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸை 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக தோற்கடித்தது. அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை 20 ஓவரில் போராடி 176-5 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 53*, சிவம் துபே 50, ஆயுஸ் மாத்ரே 32 ரன்கள் எடுத்தார்கள். மும்பைக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நாயகன் ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்த விளையாடிய மும்பைக்கு 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ரியான் ரிக்கல்டன் 24 ரன்னில் ஜடேஜா சுழலில் அவுட்டானார்.
மும்பை வெற்றி:
ஆனால் மறுபுறம் அதிரடி காட்டிய ரோஹித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து அபாரமாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவருடன் சேர்ந்த சூரியகுமார் யாதவ் தம்முடைய ஸ்டைலில் சுமாராக பவுலிங் செய்த சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கினார். அந்த வகையில் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடிய அந்த ஜோடியில் இருவருமே அரை சதத்தை அடித்து மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர்.
அவர்களுடைய அதிரடியான ஆட்டத்தால் 15.4 ஓவரிலேயே 177/1 ரன்களை எடுத்த மும்பை தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியது. அந்த அணிக்கு ரோஹித் சர்மா 76* (45) சூரியகுமார் 68* (30) ரன்கள் எடுத்து 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சிஎஸ்கே அணியை தோற்கடித்தார்கள். மறுபுறம் 2008க்குப்பின் 9 விக்கெட் வித்யாசத்தில் தங்களுடைய இரண்டாவது மிகப்பெரிய சாதனை படுதோல்வியை சந்தித்த சென்னை புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தை வலுவாக பிடித்துள்ளது.
ரோஹித் 2 சாதனை:
இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ரோஹித் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா 20 ஆட்டநாயகன் விருதுகளை வென்றுள்ளார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதுகள் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் விராட் கோலி 19, எம்எஸ் தோனி 18 ஆட்டநாயகன் விருதுகளை வென்று அந்தப் பட்டியலில் 2, 3வது இடங்களில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க:கோலிக்கு பாராட்டுக்கள்.. அந்த வாய்ப்பு கிடைச்சும் விட்டதே பஞ்சாப் தோல்விக்கு காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ் பேட்டி
இது போக ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற ஷிகர் தவான் சாதனையையும் உடைத்துள்ள ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. விராட் கோலி: 8326
2. ரோஹித் சர்மா: 6786
3. ஷிகர் தவான்: 6769
4. டேவிட் வார்னர்: 6565
5. சுரேஷ் ரெய்னா: 5528



