
இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே இந்த தொடரில் வெறும் 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்பார் என்று கூறப்பட்டது. பணிச்சுமை காரணமாக அவரால் இந்த தொடரில் முழுவதுமாக விளையாட முடியாது என்றும் தெளிவாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் விளையாடிய பும்ரா இரண்டாவது போட்டியின் போது ஓய்வு எடுத்துக் கொண்டார்.
அதன்பின்னர் மூன்றாவது மற்றும் நான்காவது போட்டியில் அவர் விளையாடி இருந்த வேளையில் ஐந்தாவது போட்டியில் மீண்டும் பணிச்சுமை காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டார். ஆனால் இந்திய அணிக்கு இந்த ஐந்தாவது டெஸ்ட் முக்கியமான போட்டி என்பதனால் அவர் விளையாடியிருக்க வேண்டும் என்று பலரும் கூறியிருந்தனர்.
ஆனால் தனது உடற்தகுதியை கருத்தில் கொண்டு அவர் ஐந்தாவது போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டார். ஏற்கனவே இந்திய அணி ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இந்த தொடரில் பின்னிலை வகிக்கும் நிலையில் ஐந்தாவது போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இவ்வேளையில் பும்ரா இந்த போட்டியில் இல்லாதது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக மாறியுள்ளது.
இந்நிலையில் பும்ராவின் பணிச்சுமை குறித்தும் அவரை எவ்வாறு கையாள வேண்டும்? என்பது குறித்தும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளென் மெக்ராத் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : உங்களுடைய சிறந்த பவுலர் தொடர்ந்து பந்துவீச வேண்டுமெனில் அவர் முதலில் தொடர்ந்து விளையாட விருப்பப்பட வேண்டும். பும்ரா போன்ற ஒரு பவுலருக்கு நீங்கள் ஒரு சில ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை கொடுத்தால் எதிரில் இருக்கும் அணி அவரால் மூன்று, நான்கு ஓவர்கள் மட்டுமே வீச முடியும் என்பதை புரிந்து கொண்டு அவரை சமாளித்து விடுவார்கள்.
பும்ரா சிறிய ஸ்பெல்லை வீசினாலும் அவருடன் இணைந்து பந்துவீசும் பவுலர்கள் தரமான பவுலர்களாக இருக்க வேண்டும். அப்படி ஒரு குழுவாக சிறந்த பவுலர்கள் ஒன்று சேர்ந்தால் பும்ரா குறைந்த ஓவர்கள் வீசினாலும் நல்ல பலன் கிடைக்கும். அந்த வகையில் பும்ராவிற்கு சமமான பந்துவீச்சாளர்களை இந்திய அணி உருவாக்க வேண்டும். அதுமட்டும் இன்றி தற்போது தனது பணிச்சுமையை பராமரித்து வரும் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார்.
இதையும் படிங்க : இந்த வாக்குறுதியை மட்டும் அவருக்கு குடுங்க.. இனியும் அசத்துவாரு.. வாஷிங்டன் சுந்தரை பாராட்டிய – வருண் ஆரோன்
எனவே டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை அனைத்து தொடர்களிலும் பங்கேற்றகாமல் முக்கியமான தொடர்களில் மட்டுமே பங்கேற்று அவர் போதுமான போட்டிகளில் மட்டுமே விளையாட வேண்டும். அப்போதுதான் அவரால் சிறப்பாக செயல்பட முடியும். இனிவரும் டெஸ்ட் தொடர்களில் முக்கியமான தொடர்களுக்கு மட்டும் அவரை பயன்படுத்திக் கொள்ளலாம் என மெக்ராத் கூறியது குறிப்பிடத்தக்கது.