- Advertisement -
ஐ.பி.எல்

ஜடேஜா மாதிரியே அவரும் கேப்டன்ஷிப் செய்ய செட்டாக மாட்டாரு – இந்திய வீரர் பற்றி ரவி சாஸ்திரி

ஐபிஎல் 2022 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்ல வேண்டுமென்ற எண்ணத்துடன் களமிறங்கிய 10 அணிகளில் குஜராத், ராஜஸ்தான், லக்னோ, பெங்களூர் ஆகிய அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றன. மும்பை, சென்னை போன்ற வெற்றிகரமான ஐபிஎல் அணிகள் உட்பட எஞ்சிய 6 அணிகள் பரிதாபமாக லீக் சுற்றுடன் வெளியேறியன. அதில் மயங்க் அகர்வால் தலைமையில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் பங்கேற்ற 14 போட்டிகளில் 7 வெற்றிகளும் 7 தோல்விகளையும் பதிவு செய்து 6-வது இடம் மட்டுமே பிடித்து வெளியேறியது.

அதனால் ஒவ்வொரு வருடத்தைப் போல இம்முறையும் அந்த அணியின் முதல் கோப்பை கனவு கனவாகவே போனது. கடந்த 2008 முதல் நிறைய கேப்டன்களை நியமித்த போதிலும் வெற்றியை காணாத அந்த அணி நிர்வாகம் இந்த முறை பெங்களூருவைச் சேர்ந்த இளம் வீரர் மயங்க் அகர்வாலை கேப்டனாக நியமித்தது. ஆனால் அவர் தலைமையில் சுமாராக செயல்பட்டு பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாதது அந்த அணி நிர்வாகத்திற்கு மீண்டும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

- Advertisement -

சொதப்பிய அகர்வால்:
அதைவிட இந்த தொடரில் சிறப்பாக செயல்பட வேண்டிய அந்த அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் 13 போட்டிகளில் வெறும் 196 ரன்களை 16.33 என்ற சுமாரான சராசரி மட்டுமே எடுத்தது ஒரு பின்னடைவாக அமைந்தது. கடந்த 2 சீசன்களில் முறையே 424, 441 ரன்களை பஞ்சாப் அணிக்காக ஒரு சாதாரண பேட்ஸ்மேனாக வெளுத்து வாங்கிய அவர் இந்த முறை தடுமாறியதற்கு கேப்டன்சிப் பொறுப்பு ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

ஏனெனில் இதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் செய்த அனுபவம் இல்லாத அவர் அணியின் நன்மைக்காக வழக்கமாக களமிறங்கும் ஓபனிங் இடத்தை மற்ற வீரர்களுக்கு கொடுத்துவிட்டு மிடில் ஆர்டரில் விளையாடினார். இடையில் லேசாக காயமடைந்த அவர் சுமாராக செயல்பட்ட காரணத்தால் ஐபிஎல் முடிந்ததும் நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. மொத்தத்தில் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவி அவரின் பேட்டிங்கை பாதித்து ஏற்கனவே நிலையான இடத்தை பெறாமல் தவித்த அவரின் இந்திய அணி வாய்ப்பும் பறிபோக ஒரு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

- Advertisement -

ஜடேஜா மாதிரி:
இதே தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடிய சென்னையின் கேப்டன்ஷிப் பொறுப்பை தொடர் துவங்க ஒருசில நாட்கள் முன்பாக 4 கோப்பைகளை வென்ற ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி இந்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் வழங்கினார். ஆனால் உள்ளூர் போட்டிகளில் கூட கேப்டன்ஷிப் அனுபவமில்லாத அவர் தலைமையில் முதல் 4 போட்டிகளில் தோற்ற சென்னை பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது. அதைவிட கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பிய அவர் அந்தப் பதவியே வேண்டாம் என்று மீண்டும் தோனியிடம் வழங்கிய அடுத்த போட்டியில் காயமடைந்து மொத்தமாக வெளியேற்றினார்.

இந்நிலையில் ஜடேஜாவை போலவே மயங்க் அகர்வால் கேப்டனாக செட்டாக மாட்டார் என தெரிவித்துள்ள முன்னாள் இந்திய ஜாம்பவான் ரவிசாஸ்திரி அதுவே இந்திய அணியில் அவரின் இடம் பறிபோக ஒரு காரணம் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மயங் அகர்வாலும் ரவீந்திர ஜடேஜாவை போன்றவர். அதற்கு முன் கேப்டன்ஷிப் செய்யாத அவர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் கேப்டனாக செயல்பட வைக்கின்றன. இது மயங்க் அகர்வாலை அவமதிப்பது கிடையாது. ஏனெனில் அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்படி சிறப்பாக விளையாடுவார் என்றும் எனக்கு தெரியும்”

- Advertisement -

“ஆனால் சிறப்பாக செயல்படக்கூடிய ஒருவரை தவறான இடத்தில் போட்டால் அது தீவிரமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். அது இந்திய அணியில் குறிப்பாக டெஸ்ட் அணியில் அவரின் இடத்தை பாதிக்கும். ஏனெனில் தேர்வுக்குழுவினர் எப்போதும் ஒரு வீரரின் தற்போதைய பார்மை வைத்துதான் மதிப்பிடுவார்கள். எனவே ஒரு நல்ல வீரரான அவர் இடத்தை இழந்து நிற்பது எனக்கு சோகத்தை கொடுத்துள்ளது. கேப்டன்ஷிப் என்பது யாரின் மனதையும் தாக்கக்கூடியது. அதன் காரணமாக ஜடேஜாவும் அகர்வாலும் மோசமான கிரிக்கெட் வீரர்களாக மாறியதை பார்த்தோம்.

இருப்பினும் அவர்கள் சாதாரணமாக விளையாடும் போது எந்த அளவுக்கு சிறப்பானவர்கள் என்று நமக்கு தெரியும். எனவே வரும் காலங்களில் கேப்டன்களை தேர்வு செய்வதில் ஐபிஎல் அணிகள் அனுபவத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு செய்ய வேண்டும் என்பதை இது காட்டுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க : இந்திய டி20 அணியில் இருந்து முற்றிலுமாக ஓரங்கட்டப்பட்ட தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தர் – இதை படிங்க புரியும்

மேலும் அடுத்த வருடம் அவரிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்காமல் அவரின் சிறந்த பேட்டிங் திறமையை மட்டும் பயன்படுத்தி எப்படி வெற்றி காணலாம் என்பதை பஞ்சாப் அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்றும் ரவிசாஸ்திரி கேட்டுக்கொண்டுள்ளார். இது போன்ற அனுபவம் இல்லாத பொறுப்பை கொடுத்தால் யாராக இருந்தாலும் தடுமாறித் தான் செய்வார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Published by