ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்தியூ வேட் சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். 2006 முதல் உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடிய அவர் 2011ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்காக அறிமுகமானார். அந்த வாய்ப்பில் 2024 வரை அவர் 36 டெஸ்ட், 97 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்காக விளையாடினார்.
அந்தப் போட்டிகளில் சுமார் 5000 ரன்கள் அடித்துள்ள அவர் 5 சதங்களையும் பதிவு செய்துள்ளார். குறிப்பாக 2021 டி20 உலக கோப்பை செமி ஃபைனலில் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் கடைசி நேரத்தில் அபாரமாக விளையாடி வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அந்த வகையில் 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றிய அவர் தற்போது 36 வயதிலேயே ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்தியாவிடம் தோல்வி:
இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியா 24 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை அடித்து நொறுக்கிய இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 92 (41) ரன்கள் குவித்து தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அந்தத் தோல்வி தமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக மேத்தியூ வேட் கூறியுள்ளார்.
அந்த தோல்வியாலேயே ஓய்வெடுக்க முடிவு எடுத்ததாகவும் அவர் வெளிப்படையாக கூறியுள்ளார். இது பற்றி மேத்தியூ வேட் பேசியது பின்வருமாறு. “ஓய்வு பெற்றது கடினமான விஷயம். அனேகமாக நாங்கள் இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த பின் ஓய்வு பற்றிய எண்ணம் வந்திருக்கலாம். அப்போது தான் நான் உண்மையில் உட்கார்ந்து யோசித்தேன். அது என்னுடைய தொழில் முறை கிரிக்கெட்டின் முடிவாக இருக்கலாம் என்று நினைத்தேன்”
வருங்காலத்துக்கு வழி:
“அது ஒரு உணர்ச்சிகரமான தருணம். எனக்கு அடுத்தபடியாக ஜோஸ் இங்லீஷ் விக்கெட் கீப்பராக செயல்படுவதற்கான நேரம் வந்துள்ளது. கடந்த சில மாதங்களாக அவர் ஆஸ்திரேலிய அணிக்கு நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார். அந்த வேலையை ஏற்றுக் கொள்வதற்கு அவரும் தயாராக இருக்கிறார். டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை விளையாடுவதற்கு அவர் கச்சிதமாக பொருந்துவார்” என்று கூறினார்.
இதையும் படிங்க: 2021இல் ஏற்கனவே செஞ்சுருக்கோம்.. இந்தியாவை ஒய்ட்வாஷ் செஞ்சு.. அந்த வாய்ப்பை பறிப்போம்.. நியூஸிலாந்து கோச்
அதே போல ஐபிஎல் தொடரிலும் இனிமேல் விளையாடப் போவதில்லை என்று மேத்தியூ வேட் அறிவித்துள்ளார். அதே சமயம் சில உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் விளையாட உள்ளதாக அவர் கூறியுள்ளார். இது போக ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 அணிகளின் புதிய ஃபீல்டிங் பயிற்சியாளராகவும் அவர் பொறுப்பேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.