ஐபிஎல் 2023 : ஜடேஜாவை விட அவர் தான் இந்த சீசனில் சென்னையின் துருப்பு சீட்டா இருப்பாரு – மேத்தியூ ஹெய்டன் கணிப்பு

Hayden
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐபிஎல் டி20 தொடர் வரும் மார்ச் 31 முதல் அகமதாபாத் நகரில் கோலாகலமாக துவங்குகிறது. வரலாற்றில் 16வது முறையாக நடைபெறும் இத்தொடரில் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான அணியாகவும் முன்னாள் சாம்பியனாகவும் ஜொலிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மார்ச் 31ஆம் தேதி நடைபெறும் அறிமுக போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது. கடந்த சீசனில் கேப்டன்ஷிப் குளறுபடிகள் மற்றும் ருதுராஜ் கைக்வாட் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொதப்பலாக செயல்பட்டதால் அதிக தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் 9வது இடத்தை பிடித்த அந்த அணி 2020க்குப்பின் ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை நழுவ விட்டது.

இருப்பினும் அந்த தோல்வியிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு 2021இல் கோப்பையை வென்றது போல் இந்த வருடம் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடும் சென்னை அணி 4 வருடங்களுக்குப் பின் பாதி லீக் போட்டிகளை தன்னுடைய கோட்டையான சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுகிறது. அதுவே பெரிய பலமாக பார்க்கப்படும் நிலையில் கடந்த சீசனில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் தடுமாறி காயமடைந்து வெளியேறிய ரவீந்திர ஜடேஜா இம்முறை குணமடைந்து முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளதும் அந்த அணிக்கு வலு சேர்க்கிறது.

- Advertisement -

சென்னையின் கருப்பு குதிரை:
அவரை விட 2019 உலக கோப்பை இங்கிலாந்து வெல்வதில் முக்கிய பங்காற்றி 2019 ஹெண்டிங்லே ஆஷஸ் போட்டியில் சரித்திர வெற்றியை பெற்று கொடுத்து 2022 டி20 உலக கோப்பை ஃபைனலிலும் அரை சதம் அடித்து உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக செயல்பட்டு வரும் பென் ஸ்டோக்ஸ் சென்னை அணிக்கு விளையாடுவது மிகப்பெரிய பலமாக மாறியுள்ளது. பொதுவாக ஆல் ரவுண்டர்கள் ஒரு துறையில் விட்டாலும் மற்றொரு துறையில் அசத்தி வெற்றியை பெற்றுக் கொடுப்பார்கள் என்று சொல்வார்கள்.

அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஸ்டோக்ஸ் மற்றும் உலகின் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜடேஜா ஆகியோர் சென்னை அணிக்காக விளையாடுவது அனைவரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா தரமான வீரர் என்றாலும் பென் ஸ்டோக்ஸ் இந்த சீசனில் சென்னை அணியின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்படுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹெய்டன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஸ்டோக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். அவரும் இதுவரை ஐபிஎல் தொடர்களில் தன்னுடைய மதிப்பையும் திறமையும் உணராமல் இருந்து வருகிறார். உலகின் அனைத்து இடங்களிலும் சிறப்பாக செயல்படக்கூடிய ஒரு சில வீரர்களில் அவரும் ஒருவர். தற்போது சென்னை அணியில் விளையாடும் அவர் இந்த சீசனை துருப்புச் சீட்டு வீரராக பயன்படுவதற்கான வாய்ப்பை பெற்றுள்ளார்”

“அதே சமயம் சென்னை அணியில் இந்த சீசனில் நான் பார்க்க விரும்பும் வீரர் ரவீந்திர ஜடேஜா. அவரும் தரமான ஆல் ரவுண்டர். இந்த சீசனில் பென் ஸ்டோக்ஸ் போன்ற உலகத்தரம் வாய்ந்த ஆல் ரவுண்டர்களை சென்னை கொண்டுள்ளது. கடந்த சீசனில் தடுமாறினாலும் இந்த சீசனில் ரவீந்திர ஜடேஜா சென்னைக்கு சிறந்த வெற்றிகளை பெற்றுக் கொடுப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல தொடர்ச்சியாக ஐபிஎல் தொடரில் விளையாடாத பென் ஸ்டோக்ஸ் இதுவரை 43 போட்டிகளில் 920 ரன்களையும் 28 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2023 சீசனில் அவங்களோட பவுலிங் அட்டாக் தான் சிறப்பா இருக்கு – ரசிகர்கள் எதிர்பாரா அணியை பாராட்டும் மஞ்ரேக்கர்

குறிப்பாக 2017 ஐபிஎல் தொடரில் 316 ரன்களையும் 12 விக்கெட்களையும் எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் தொடர் நாயகன் விருது வென்ற முதல் இங்கிலாந்து வீரராக சாதனை படைத்தார். எனவே இந்த சீசனில் தோனி தலைமையில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று சென்னை ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

Advertisement