சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் திண்டாடுகிறது. குறிப்பாக சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய சென்னை வெறும் 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆனால் அதே ரன்களை கொல்கத்தா வெறும் 10.1 ஓவரில் எடுத்து அபாரமான வெற்றியை பெற்றது.
அந்தளவுக்கு மோசமாக விளையாடிய சென்னை ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இத்தனைக்கும் ருதுராஜ் காயத்தால் விலகியதால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற தோனி தலைமையில் அசத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட சென்னை மீண்டும் மோசமாக விளையாடியுள்ளது. அதனால் இங்கிருந்து அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
30 ரன்ஸ் அடிச்சுட்டு:
முன்னதாக அந்தப் போட்டியில் பவர்பிளேவில் விக்கெட்டுகள் விழுந்த போதிலும் அதிரடியாக விளையாடாதது ஏன்? என்று கேட்டதற்கு 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்ய வேண்டும் என்பதற்காக விளையாடியதாக தோனி கூறினார். ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாத முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் இப்போதும் சென்னை அணியிடம் அதிரடியாக விளையாடும் பவர் இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு முழுமையாக விளையாட வேண்டும் என்று நினைக்காமல் சிஎஸ்கே அதிரடியாக விளையாட வேண்டுமென்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இது பற்றி ஹைடன் பேசியது பின்வருமாறு. “அது 180 ரன்கள் அடிக்கக்கூடிய பிட்ச் என்று நினைத்தேன். அதில் எம்எஸ் தோனி பவர் பிளே பற்றி பேசினார். சைமன் கேட்டிச் அவரிடம் போட்டியின் முடிவில் கேள்வி எழுப்பினர். அதற்கு நாங்கள் கொஞ்சம் பழமைவாதமாக இருந்து 20 ஓவர்கள் விளையாட வேண்டும் என்று தோனி சொன்னார்”
பவரை யூஸ் பண்ணுங்க:
“அந்தக் கருத்தை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் 30 ரன்கள் விட்டுக் கொடுக்கும் போது வெற்றி கிடைக்காது என்பது தெரியும். இன்று சென்னை பவர் பிளேவில் 30 ரன்கள் அடித்த நிலையில் கொல்கத்தா 60 ரன்கள் அடித்தது. பெரும்பாலும் 4 – 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கைமாறும் ஐபிஎல் தொடரில் 30 என்பது 5 மடங்கு அதிகமாகும். கடந்தப் போட்டியில் கொல்கத்தா வெறும் 4 ரன்கள் வித்யாசத்தில் லக்னோவிடம் தோல்வியை சந்தித்தது”
இதையும் படிங்க: 9.70 கோடிக்கு இதைக் கூட செய்ய முடியல.. அஸ்வின் சிஎஸ்கே காயத்தில் உப்பை தடவுறாரு.. ஆகாஷ் சோப்ரா பேட்டி
“எனவே நீங்கள் 20 ஓவரை முடிப்பதற்காக விளையாடினால் சிக்கிக் கொள்வீர்கள். சென்னை அணியில் அதிரடிக்குப் போதுமான வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் பழமைவாதம் என்ற பெயரில் தோனி, சிவம் துபே ஆகியோர் தங்களைத் தாங்களே வெட்டி கொள்கின்றனர். பழமைவாதத்துடன் விளையாடினால் நீங்கள் பிடிபடுவீர்கள். அது தான் இன்று சென்னைக்கு நடந்தது” என்று கூறினார்.



