வீடியோ : ஹாட்ரிக் எடுத்து போராடிய ஹென்றி, வேகத்தில் மிரட்டிய பாக் – தோனியின் ஆல் டைம் சாதனையை செய்த பாபர் அசாம்

Pak vs NZ Babar Azam
- Advertisement -

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் களமிறங்கியுள்ளது. கேன் வில்லியம்சன் காயமடைந்த நிலையில் டாம் லாதம் தலைமையில் இளம் வீரர்களுடன் நியூஸிலாந்து களமிறங்கியுள்ள இத்தொடர் ஏப்ரல் 14ஆம் தேதியான நேற்று துவங்கியது. கடாபி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு துவங்கிய முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஆரம்பத்திலேயே முகமது ரிஸ்வான் 8 (10) கேப்டன் பாபர் அசாம் 9 (7) என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆடம் மில்னே வேகத்தில் ஆட்டமிழந்தனர்.

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த பக்கார் ஜமான் – சாய்ம் ஆயுப் அதிரடியாக ரன்களை சேர்த்து 3வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்தனர். அதில் சாய்ம் ஆயுப் 6 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (28) ரன்களில் ரன் அவுட்டான போது அடுத்து வந்த சடாப் கானை 13வது ஓவரின் 5வது பந்தில் 5 (3) ரன்களில் அவுட்டாக்கிய மாட் ஹென்றி அடுத்து வந்த இப்திகார் அஹ்மதையும் கடைசிப் பந்தில் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

ஹென்றி ஹாட்ரிக்:
அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் போராடிய பகார் ஜமானும் 4 பவுண்டரி 2 சிக்சருடன் 47 (28) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த இமாத் வாசிம் 16 (13) ரன்களில் அவுட்டானார். அந்த நிலையில் மாட் ஹென்றி வீசிய 19வது ஓவரின் முதல் பந்தில் ஷாஹீன் அப்ரிடி சிக்ஸர் அடிக்க முயற்சித்தார். ஆனால் அதை பவுண்டரி எல்லையில் கச்சிதமாக பிடித்த டார்ல் மிட்சேல் உள்ளே தூக்கி போட்ட பந்தை பௌஸ் அழகாக கேட்ச் பிடித்தார். அதனால் அப்ரிடியை 1 (2) ரன்னில் அவுட்டாக்கிய மாட் ஹென்றி ஏற்கனவே 13வது ஓவரின் கடைசி 2 பந்துகளில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.

அப்படி தொடர்ந்து 3 பந்துகளில் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த 4வது நியூசிலாந்து வீரர் என்ற சாதனையை ஜேகப் ஓரம், டிம் சௌதீ, மைக்கேல் பிரேஸ்வெல் ஆகியோருக்கு பின் படைத்து அசத்தினார். இறுதியில் அஸ்ரப் 26 (16) ஹாரீஸ் ரவூப் 11 (5) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கணிசமான ரன்களை எடுத்த போதிலும் 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் 182 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக மாட் ஹென்றி 3 விக்கெட்டுகளையும் ஆடம் மில்னே மற்றும் லிஸ்டர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 183 என்ற கடினமான இலக்கை துரத்திய நியூசிலாந்து பாகிஸ்தானின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 15.3 ஓவரிலேயே வெறும் 94 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக மார்க் சேப்மேன் 34 (27) ரன்களும் டாம் லாதம் 20 (24) ரன்களும் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகளையும் இமாத் வாசிம் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டி20 கிரிக்கெட்டில் பெரிய வெற்றியை பதிவு செய்து 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு 4 விக்கெட்கள் மற்றும் 11 ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹாரீஸ் ரவூப் ஆட்டநாயகன் விருது வென்றார்.

இதையும் படிங்க: SRH vs KKR : கொல்கத்தா அணிக்கெதிரான இந்த பிரமாதமான வெற்றிக்கு இவரே காரணம் – எய்டன் மார்க்ரம் பேட்டி

இந்த வெற்றியில் பெரிய அளவில் பங்காற்றவில்லை என்றாலும் பாகிஸ்தானை வெற்றிகரமாக வழி நடத்திய கேப்டன் பாபர் அசாம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த 2வது கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். அந்த பட்டியல்:
1. அஸ்கர் ஆப்கான் : 42 (52 போட்டிகள்)
1. இயன் மோர்கன் : 42 (72 போட்டிகள்)
2. பாபர் அசாம் : 41* (67 போட்டிகள்)
2. எம்எஸ் தோனி : 41 (72 போட்டிகள்
3. ஆரோன் பின்ச் : 40 (76 போட்டிகள்)

Advertisement