இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்குகிறது. அந்த தொடரில் இந்தியா வெல்வதற்கே அதிகப்படியான வாய்ப்புகள் இருக்கிறது என்று ரசிகர்கள் நம்புகின்றனர். ஏனெனில் கடந்த 12 வருடங்களாக உலகில் எந்த அணிக்கு எதிராகவும் தங்களுடைய சொந்த ஊரில் ஒரு தொடரில் தோற்காமல் இந்தியா சாதனை படைத்து வருகிறது.
ஆனால் தற்போது நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே டி20 போல அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதாக தெரிவிக்கும் இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் அதை பயன்படுத்தி இம்முறை இந்தியாவிலும் கோப்பையை வெல்வோம் என்று சவால் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக கடந்த 2022 நவம்பர் மாதம் பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அடித்து நொறுக்கும் பேட்டிங்கை வெளிப்படுத்திய இங்கிலாந்து 3 – 0 என்ற கணக்கில் சாதனை வெற்றி பெற்றது.
இந்தியாவிலும் நொறுக்குவோம்:
இந்நிலையில் யாருமே நினைத்துப் பார்க்காத போது பாகிஸ்தான் மண்ணில் 3 – 0 என்ற கணக்கில் அதிரடியாக விளையாடி வென்றதாக இங்கிலாந்து வீரர் மார்க் வுட் தெரிவித்துள்ளார். எனவே அருகில் இருக்கும் இந்தியாவிலும் அதே போல அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெல்வோம் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு.
“இங்கேயும் நாங்கள் போட்டியை அதிரடியாக எடுத்துச் செல்வோம் என்று நினைக்கிறேன். அந்த வகையில் விளையாடினால் உங்களால் இந்திய அணியின் மீது அழுத்தத்தை திருப்பி போட முடியும். இவை அனைத்தும் தேவைப்படும் போது அழுத்தத்தை உள்வாங்குவதை பொறுத்ததாகும். எனவே நாங்கள் அந்த அழுத்தத்தை எடுத்துக்கொண்டு தியேட்டர் அல்லது டிராமா போல களத்தில் பரபரப்பான தருணங்களை ஏற்படுத்த வேண்டும்”
“அதன் பின் அவர்களை அட்டாக் செய்வதற்கான நேரம் வரும். அது பேட்டிங் பவுலிங் ஆகிய இரண்டுக்கும் ஒன்றாகும். இந்தியாவில் சவால்கள் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். ஏனெனில் அவர்கள் தங்களின் சொந்த வீட்டில் அரிதாகவே தோற்பார்கள். இது போன்ற சூழ்நிலைகளில் நாங்கள் வித்தியாசமானவற்றை செய்ய முயற்சிப்பது எங்களுக்கு ஃப்ரீ ஹிட் போல அமையும்”
இதையும் படிங்க: நியாயமா பாத்தா அவர் தான் கோலிக்கு பதிலாக விளையாட தகுதியானவர்.. ஆனா நடக்குமா.. ஆகாஷ் சோப்ரா
“மேலும் சமீபத்தில் நாங்கள் பாகிஸ்தானில் அனைத்து போட்டிகளையும் வென்ற அணியாக வரலாறு படைத்தோம். எனவே தற்போது இந்தியாவை அவர்களுடைய சொந்த சூழ்நிலைகளில் தோற்கடிக்க இது எங்களுக்கு மற்றுமொரு நல்ல வாய்ப்பாகும்” என்று கூறினார். இருப்பினும் பாகிஸ்தானில் தார் ரோட் போலிருந்த பிட்ச்கள் இந்தியாவில் அப்படியே நேர்மாறாக சுழலுக்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.