இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி 25ஆம் தேதி துவங்குகிறது. அதில் 12 வருடங்கள் கழித்து சவாலான இந்திய மண்ணில் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து விளையாட உள்ளது. அதற்கு சவாலை கொடுக்க உள்ள இந்தியா 2012க்குப்பின் சொந்த ஊரில் தோற்காமல் இருந்து வரும் வெற்றி நடையை தொடர போராட உள்ளது.
அதனால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக விளையாடவில்லை என்று அறிவித்துள்ளார். அதனால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் நிலைமையை சமாளிக்க ரஜத் படிடார் அல்லது சர்ஃப்ராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் அவரின் இடத்தில் விளையாடும் வாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமமான அனுபவம்:
இந்நிலையில் இத்தொடரின் முதல் 2 போட்டிகளில் செட்டேஸ்வர் புஜாரா தான் விராட் கோலியின் இடத்தில் விளையாடுவதற்கு தகுதியானவர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். குறிப்பாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடி கழற்றி விடப்பட்ட அவர் நடைபெற்று வரும் 2024 ரஞ்சி கோப்பையில் முதல் போட்டியில் இரட்டை சதமடித்து 2வது போட்டியிலும் 100க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்து சௌராஷ்ட்ராவின் வெற்றியில் பங்காற்றினர்.
அந்த வகையில் ஃபார்முக்கு திரும்பியுள்ள அவர் முதல் தர கிரிக்கெட்டில் 20000 ரன்கள் அடித்த வீரர் என்ற சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகிய ஜாம்பவான்களின் சாதனையும் சமீபத்தில் சமன் செய்திருந்தார். எனவே விராட் கோலிக்கு நிகரான அனுபவத்தை கொண்ட அவர் விளையாடுவது சரியாக இருக்கும் என்று கூறும் ஆகாஷ் சோப்ரா இது பற்றி பேசியது பின்வருமாறு.
“அவரை உங்களால் தேர்வு செய்ய முடியும். இருப்பினும் இந்தியா அந்த வழியில் நகரும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் இளம் வீரர்களை நோக்கி நகர்ந்துள்ளார்கள். நியாயப்படி அந்த இடத்தில் விளையாட புஜாரா சரியான ஆப்ஷன்”
இதையும் படிங்க: இந்த தொடரில் அவங்க ஜெயிக்கலைன்னா தான் ஆச்சர்யம்.. முன்னாள் இங்கிலாந்து கோச் ஆண்டி ஃபிளவர்
“ஆனால் தேர்வுக் குழுவினர் அவரையும் இந்திய அணியில் தேர்வு செய்வதற்கான ஒருவராக பார்க்கிறார்களா என்பது முக்கியம்” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2022 பிப்ரவரியில் கழற்றி விடப்பட்ட புஜாரா கம்பேக் கொடுத்த போதிலும் மீண்டும் சுமாராக செயல்பட்டதால் 2வது முறையாக கழற்றி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.