வீடியோ : அடித்து நொறுக்கிய ஸ்டாய்னிஸ், யுவராஜ் சிங்கை மிஞ்சி படைத்த 3 வரலாற்று சாதனைகள் இதோ

Marcus Stoinis Aaron Finch AUS vs SL
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் அக்டோபர் 26ஆம் தேதியன்று நடைபெற்ற 19வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் ஆசிய சாம்பியன் இலங்கையும் பலப்பரீட்சை நடத்தின. அதில் தன்னுடைய முதல் போட்டியில் நியூசிலாந்திடம் படு தோல்வியை சந்தித்ததால் சொந்த மண்ணில் கோப்பையை தக்கவைக்க வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் போராடி 157/6 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் 5 (6) டீ சில்வா 26 (23) பனுக்கா ராஜபக்சா 7 (5) கேப்டன் சனாக்கா 3 (5) என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தொடக்க வீரர் நிஷாங்கா 40 (45) ரன்களும் சரித் அஸலங்கா 3 பவுண்டரி 2 சிக்சருடன் அதிரடியாக 38* (25) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 158 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியா கட்டுக்கோப்பாக பந்து வீசிய இலங்கையை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பத்திலேயே திணறியது. குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் வார்னர் 11 (10) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் தடுமாறி 18 (17) ரன்களில் ஆட்டமிழந்தார். அதனால் ரொம்பவே தடுமாறிய ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக களமிறங்கி 2 பவுண்டரி 2 சிக்சர்கள் பறக்கவிட்ட கிளன் மேக்ஸ்வெல் 23 (12) ரன்களை குவித்து நம்பிக்கை கொடுத்தாலும் மீண்டும் பெரிய ரன்களை எடுக்காமல் அவுட்டானார்.

- Advertisement -

ஹல்க் ஸ்டாய்னிஸ்:
ஆனாலும் அவர்களை விட மறுபுறம் அவுட்டாகாமலேயே தடவிய மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஆரோன் பின்ச் வெறும் 1 சிக்சருடன் 42 பந்துகளில் 31* ரன்களுடன் டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடி தன்னுடைய அணிக்கு பெரிய பாரமாக மாறினார். அதனால் 12.2 ஓவரில் 89/3 என தடுமாறி ஆஸ்திரேலியாவின் ரன்ரேட் எகிறியதுடன் வெற்றியும் கேள்விக்குறியானது. அப்போது தூள் படத்தில் வரும் பறவை முனியம்மாவை போல் அடுத்ததாக களமிறங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் இலங்கை பவுலர்கள் சுத்தியலால் அடித்தது போல் சரமாரியாக அடித்து நொறுக்கினார் என்றே கூறலாம்.

ஏனெனில் களமிறங்கியது முதல் சிக்ஸர்களையும் பவுண்டரிகளையும் பறக்க விட்ட அவர் இதற்கா இவ்வளவு இழுத்தீர்கள் என்ற வகையில் 16.3 ஓவரிலேயே ஆஸ்திரேலியாவை 158/3 ரன்கள் எடுக்க வைத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற வைத்தார். அந்தளவுக்கு வெறும் 18 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சர்கள் பறக்கவிட்ட அவர் 59* ரன்களை விளாசி இந்த உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முதல் வெற்றியை அசால்டாக பதிவு செய்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

- Advertisement -

பொதுவாகவே அதிரடியாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் நீண்ட நாட்கள் கழித்து தன்னுடைய முரட்டுத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தியதை பார்த்த ரசிகர்களும் வல்லுநர்களும் அவரை அவருடைய பட்டப் பெயரான ஹல்க் என்ற பெயருடன் கொண்டாடுகிறார்கள். அதைவிட இப்போட்டியில் வெறும் 17 பந்துகளில் அரை சதமடித்த அவர் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரை சதமடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற புதிய வரலாற்று சாதனை படைத்தார். அந்தப் பட்டியல்:
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. டேவிட் வார்னர் : 18, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக, 2010
2. கிளன் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
2. கிளன் மேக்ஸ்வெல் : 18, இலங்கைக்கு எதிராக, 2016

அத்துடன் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக அரைசதம் அடித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்த அவர் ஒட்டுமொத்த பட்டியலில் 2வது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் பகிர்ந்து கொண்டார். அந்தப் பட்டியல்:
1. யுவராஜ் சிங் : 12 பந்துகள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
2. மார்கஸ் ஸ்டோனிஸ் : 17 பந்துகள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. ஸ்டீபன் மைபர்க் : 17, அயர்லாந்துக்கு எதிராக, 2014
3. கிளென் மேக்ஸ்வெல் : 18, பாகிஸ்தானுக்கு எதிராக, 2014
3. கேஎல் ராகுல் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021
3. சோயப் மாலிக் : 18, ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக பாபர் அசாம் எடுத்த அந்த முடிவு தவறானது. அவர் பதவி விலக வேண்டும் – ரசிகர்கள் கோபம்

அதைவிட இப்போட்டியில் 327.78 என்ற தெறிக்கவிடும் ஸ்டிரைக் ரேட்டில் ஆசிய சாம்பியன் இலங்கையை அடித்து நொறுக்கிய அவர் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 300+ ஸ்ட்ரைக் ரேட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற யுவராஜ் சிங் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. மார்கஸ் ஸ்டாய்னிஸ் : 59* ரன்கள், இலங்கைக்கு எதிராக, 2022*
2. யுவராஜ் சிங் : 58 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக, 2007
3. சோயப் மாலிக் : 54* ரன்கள், ஸ்காட்லாந்துக்கு எதிராக, 2021

Advertisement