
இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 0 (2) என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா வென்றது. அதனால் 2000க்குப்பின் 25 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்று தென்னாப்பிரிக்கா சாதனை படைத்தது. அத்தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் போட்டியில் 15 வருடங்கள் கழித்து இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா தோற்கடித்து சாதனை படைத்தது.
கௌகாத்தியில் நடைபெற்ற 2வது போட்டியில் 408 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்கா மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் வாயிலாக இந்தியாவுக்கு எதிராக மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அணியாக தென்னாப்பிரிக்கா உலக சாதனை படைத்தது. மறுபுறம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடிப்படையில் இந்தியா தங்களது மிகப்பெரிய தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது.
தென் ஆப்பிரிக்காவின் இந்த வெற்றிக்கு பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் அட்டகாசமாக விளையாடி ஆல் ரவுண்டராக முக்கிய பங்காற்றிய மார்கோ யான்சென் தொடர்நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இந்திய சூழ்நிலைகளைப் படித்து அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை மாற்றி, வேலை செய்த திட்டங்களில் நிலைத்து விளையாடியதே தங்களுடைய வெற்றிக்கு வித்திட்டதாக மார்கோ தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்தியாவில் டெஸ்ட் போட்டியையும் தொடரையும் வெல்வது மிகவும் ஸ்பெஷலானது. அதற்காக தங்களுடைய கைகளை உயர்த்தி இந்த வெற்றியை சாத்தியமாக்கிய எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பாராட்டுக்கள். நாங்கள் எளிமையான விஷயங்களை செய்வதைப் பற்றி விவாதித்தோம்”
“சூழ்நிலைகளைப் படித்து, அதற்குத் தகுந்தார் போல் திட்டங்களை மாற்றி, வேலை செய்யும் விஷயங்களில் நிற்க முயற்சித்தோம். இதற்கான அனைத்து பாராட்டுகளையும் எங்களுடைய பயிற்சியாளர் சுக்ரி கோன்ராட் அவர்களுக்கு கொடுக்கிறேன். அவர் களத்துக்குச் சென்று உன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்து என்று எனக்கு ஆதரவு கொடுத்தார்”
இதையும் படிங்க: இதுக்காக 10 வருடம் காத்திருந்தேன்.. இந்தியாவை சாய்க்க இதான் என் திட்டம்.. ஆட்டநாயகன் சைமன் பேட்டி
“இந்த வெற்றிக்காக எங்கள் அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் கடினமாக உழைத்துள்ளார்கள். அத்துடன் தேவையான விஷயங்களுக்கு தனி நபர்கள் தங்களுடைய செயல்பாடுகளைக் கொடுத்தார்கள். எப்போதும் முன்னேற முயற்சிக்கும் நாங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து எங்களது சிறந்த ஆட்டத்தைக் கொடுக்க முயற்சிக்கிறோம்” என்று கூறினார். இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா தங்களை உலக டெஸ்ட் சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது என்றே சொல்லலாம்.