வீடியோ : போட்டியை கவனிக்காமல் வேடிக்கை பார்த்த அம்பயர் – அசத்திய தெ.ஆ, ஜேசன் ராய் மாஸ் கம்பேக் போராட்டம் வீண்

Umpire
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 27ஆம் தேதியன்று ப்ளூம்போயிண்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இத்தொடரில் கடந்த 2 வருடங்களாக காயத்தால் அவதிப்பட்டு வந்த இங்கிலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோப்ரா ஆர்ச்சர் ஒரு வழியாக முழுமையாக குணமடைந்து களமிறங்கினார். அந்த நிலையில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து 50 ஓவர்களில் 298/7 ரன்கள் குவித்தது.

அந்த அணிக்கு குயின்டன் டீ காக் 37, கேப்டன் பவுமா 36 என தொடக்க வீரர்கள் கணிசமான ரன்களை விளாசி கொடுத்த நல்ல தொடக்கத்தை 3வது இடத்தில் களமிறங்கிய ராசி வேன் டெர் டுஷன் கச்சிதமாக பயன்படுத்தி சதமடித்து 7 பவுண்டரி 1 சிக்சருடன் 111 (117) ரன்கள் குவித்தார். அவருக்கு பின் மிடில் ஆர்டரில் ஹென்றிச் க்ளாஸென் 30, டேவிட் மில்லர் 53 என முக்கிய வீரர்கள் கணிசமான ரன்களை எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சாம் கரன் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

- Advertisement -

தவற விட்ட அம்பயர்:
அதை தொடர்ந்து 299 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு பவர் பிளே ஓவர்களிலிருந்தே அதிரடியை துவக்கிய டேவிட் மாலன் – ஜேசன் ராய் ஆகிய ஓப்பனிங் ஜோடி 20 ஓவர்கள் வரை நங்கூரமாக நின்று 146 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான தொடக்கம் கொடுத்தது. அதில் 9 பவுண்டரியுடன் டேவிட் மாலன் 59 (55) ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த பென் டூக்கெட் 3 (5), ஹரி ப்ரூக் 0 (3) என முக்கிய முக்கிய வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

இருப்பினும் மறுபுறம் வெளுத்து வாங்கிய ஜேசன் ராய் சதமடித்து 11 பவுண்டரி 4 சிக்சருடன் 113 (91) ரன்களை விளாசி அவுட்டானார். குறிப்பாக சமீப காலங்களில் பார்மை இழந்து தடுமாறிய அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலக கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த நிலைமையில் அதிரடியாக செயல்பட்ட அவர் இப்போட்டியில் சதமடித்து மாஸ் கம்பேக் கொடுத்தார் என்று சொல்லலாம். ஆனால் அது வீணாகும் வகையில் அடுத்ததாக பொறுப்புடன் செயல்பட வேண்டிய கேப்டன் ஜோஸ் பட்லர் 36 (42), மொய்ன் அலி 11 (17), சாம் கரண் 17 (21) என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தென் ஆப்பிரிக்காவின் தரமான பந்து வீச்சில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

அடுத்து வந்த வீரர்களும் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் ஒரு கட்டத்தில் வெற்றியை கையில் வைத்திருந்த இங்கிலாந்து 44.2 ஓவரில் 271 ரன்களுக்கு சுருண்டு பரிதாபமாக தோற்றது. அதனால் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அன்றிச் நோர்ட்ஜெ 4 விக்கெட்களையும் சிசண்டா மாகளா 3 விக்கெட்களையும், ககிஸோ ரபாடா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

முன்னதாக இப்போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் செய்த இன்னிங்ஸில் அன்றிச் நோர்ட்ஜெ வீசிய 24வது ஓவரின் முதல் பந்தை அதிரடியாக எதிர்கொண்ட ஜேசன் ராய் பவுண்டரி பறக்க விட்டார். அப்போது அவரது ஷாட்டை ரிப்ளையில் பார்த்து வர்ணனையாளர்கள் பாராட்டிய நிலையில் பக்கவாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த நடுவர் மரைஸ் எராஸ்மஸ் பந்தை கவனிக்காமல் இருந்தது தெரிய வந்தது. பொதுவாக போட்டியின் ஒவ்வொரு பந்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டிய நடுவர்கள் ஒரு பந்து வீசப்பட்ட பின் அதனுடைய முடிவை ஸ்கோர் போர்ட் நிர்வகிப்பவர்களுக்கு அறிவிப்பார்.

அத்துடன் அந்த பந்து அல்லது ஓவர் முடிந்ததை களத்திலேயே கையில் வைத்துள்ள பேப்பர் அல்லது நவீன மெஷினில் பதிவு செய்வார். அது போல முந்தைய ஓவர் முடிந்ததற்கான குறிப்பை பதிவு செய்ததில் முழு கவனத்தை செலுத்திய அவர் அடுத்த பந்து வீசுவதை கவனிக்காமல் தவற விட்டார். கடைசியில் ஜேசன் ராய் பந்தை அடித்த சத்தத்தை கேட்ட பின்பு தான் பந்து வீசப்பட்டதை திரும்பி பார்த்த அவரை சமூக வலைதளங்களில் வழக்கம் போல ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Advertisement