ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மார்ச் 28ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் சென்னையை 50 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு தோற்கடித்தது. அதனால் சென்னையை அதனுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் பெங்களூரு 17 வருடங்கள் கழித்து தோற்கடித்து அசத்தியது. முன்னதாக அந்தப் போட்டியில் 197 ரன்களை துரத்திய சென்னைக்கு ரச்சின் ரவீந்திரா 41 ரன்கள் எடுத்து போராடினார்.
ஆனால் எதிர்புறம் கேப்டன் ருதுராஜ், சாம் கரண், சிவம் துபே உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்தனர். கடைசி நேரத்தில் ரவீந்திர ஜடேஜா போராடிய நிலையில் அடுத்ததாக தோனி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு முன் களமிறங்கிய அஸ்வின் 11 ரன்கள் மட்டுமே எடுத்தார். அடுத்ததாக வந்த தோனி எதிர்பார்த்ததைப் போலவே அவரை விட சிறப்பாக விளையாடி 30* (16) ரன்கள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
திவாரி விளாசல்:
இந்நிலையில் தோனி 9க்கு பதில் 7வது இடத்தில் களமிறங்கியிருந்தால் 50க்கு பதில் 20 – 30 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோற்றிருக்கும். அதனால் சென்னையின் ரன்ரேட் காப்பாற்றப்பட்டிருக்கும் என்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். ஆனால் தோனியை மேலே களமிறங்கச் சொல்லும் தைரியம் சிஎஸ்கே அணியில் யாரிடமும் இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
அது போக வெற்றி உறுதியாக கிடைக்கும் என்று தெரியாத சூழ்நிலையில் அதைப்பற்றி கவலைப்படாமல் சிஎஸ்கே ரசிகர்கள் தோனி களமிறங்கியதை கொண்டாடியதாகவும் திவாரி கூறியுள்ளார். எனவே சிஎஸ்கே ரசிகர்கள் மூடர்களா? என்று அவர் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
தைரியம் இல்லை:
“தோனி போன்ற 16 பந்தில் 30 ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் ஏன் மேலே களமிறங்கவில்லை என்பது எனதுப் புரிதலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. நீங்கள் வெற்றிக்காக தானே விளையாடுகிறீர்கள்? தோனி மற்ற சிஎஸ்கே பேட்ஸ்மேன்களை விட அதிக ஸ்ட்ரைக் ரைட்டை கொண்டுள்ளார். எனவே உங்களால் முடியும் என்று தெரியும் போது மேலே வந்து வெற்றியை பெற முயற்சிக்க வேண்டும். ஏன் லோயர் ஆர்டரில் பேட்டிங் செய்கிறீர்கள் என்பது பற்றி மக்களிடம் தோனி வெளிப்படையாக சொல்லுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்”
இதையும் படிங்க: 246/3 டூ 271 ஆல் அவுட்.. இந்தாங்க வெற்றியை வெச்சுக்கோங்க.. பாபர் அசத்தியும் பாகிஸ்தான் மோசமான சாதனை
“அவர் வந்த போது காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களா? சென்னை ரசிகர்கள் தோனி பேட்டிங் செய்ய வந்த போது நடனமாடினார்கள். அவர்கள் வெற்றியைத் தாண்டி இதைத்தான் பார்க்க வருகிறார்கள். மேலே செய்யுங்கள் என்று தோனியிடம் சொல்வதற்கு சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர்களுக்கு தைரியம் இல்லை. ஒருமுறை அவர் முடிவெடுத்து விட்டால் அவ்வளவு தான். அவரிடம் சிஎஸ்கே பயிற்சியாளர்களால் எதுவும் சொல்ல முடியாது என்று கூறினார்.



