பேசாம இந்திய கிரிக்கெட்டின் அந்த ஆணிவேரை அழிச்சுடுங்க.. பிசிசிஐக்கு மனோஜ் திவாரி வேதனையான கோரிக்கை

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியா தற்போது தரத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு நிகரான நம்பர் ஒன் அணியாக செயல்பட்டு வருகிறது. அதே போல ஐபிஎல் தொடரால் ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கோடிகளை சம்பாதிக்கும் பிசிசிஐ இன்று ஐசிசியை முந்தி சர்வதேச கிரிக்கெட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் முக்கிய அங்கமாக விஸ்வரூப வளர்ச்சி கண்டுள்ளது என்றே சொல்லலாம்.

இருப்பினும் ஐபிஎல் தொடரால் எந்தளவுக்கு நன்மைகள் கிடைத்ததோ அதே அளவுக்கு இந்தியாவுக்கு பின்னடைவும் ஏற்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ஏனெனில் இப்போதெல்லாம் ஹர்டிக் பாண்டியா சில வீரர்கள் ஒரு சில மாதங்கள் விளையாடுவதற்கு கோடிகள் கொடுக்கப்படும் ஐபிஎல் தொடருக்கு முன்னுரிமை கொடுத்து நாட்டுக்காக காயம் என்ற பெயரில் வெளியேறுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

- Advertisement -

பேசாம அழிச்சுடுங்க:
இவை அனைத்தையும் விட இன்று இந்தியா உலக கிரிக்கெட்டில் ஓங்கி நிற்பதற்கு ரஞ்சிக் கோப்பை உள்ளூர் தொடர் தான் ஆழமான விதையாக பார்க்கப்படுகிறது. சொல்லப்போனால் ஒரு காலத்தில் ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் வீரர்களுக்கே இந்திய அணியில் முன்னுரிமையுடன் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் ரஞ்சிக் கோப்பையில் இருந்தே சுனில் காவாஸ்கர் முதல் சச்சின் டெண்டுல்கர் வரை பல ஜாம்பவான்கள் இந்தியாவுக்காக விளையாடி சாதனைகள் படைத்தனர்.

ஆனால் சமீப காலங்களாகவே ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்யும் தேர்வுக் குழுவினர் ரஞ்சிக் கோப்பையில் அபாரமாக விளையாடும் சர்ப்ராஸ் கான் போன்ற வீரர்களை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் ஆணிவேராக கருதப்படும் ரஞ்சிக் கோப்பைக்கு இப்போதெல்லாம் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என முன்னாள் வீரர் மனோஜ் திவாரி வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

எனவே பேசாமல் அதை நிறுத்தி அழித்து விடுமாறு பிசிசிஐக்கு ட்விட்டரில் அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்திய கிரிக்கெட்டின் காலண்டரில் அடுத்த சீசனில் இருந்து ரஞ்சிக் கோப்பை அழிக்கப்பட வேண்டும். இந்த வரலாற்று சிறப்புமிக்க கௌரவமான தொடரை காப்பாற்றுவதற்கு பல்வேறு அம்சங்களை உற்று நோக்க வேண்டியுள்ளது”

இதையும் படிங்க: விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்குறேன்.. உருக்கமாக பேசிய ஏபிடி.. ரசிகர்களுக்கு முக்கிய கோரிக்கை

“ஏனெனில் இந்த தொடர் தன்னுடைய அழகையும் முக்கியத்துவத்தையும் இழந்து வருகிறது. அதை பார்ப்பது முற்றிலும் விரக்தியை ஏற்படுத்துகிறது” என்று பதிவிட்டுள்ளார். அதாவது ஐபிஎல் தொடருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ரஞ்சிக் சமீப காலங்களில் ரஞ்சிக் கோப்பைக்கு கொடுக்கப்படுவதில்லை என மனோஜ் திவாரி ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். எனவே பெயருக்காக நடத்துவதற்கு பதில் பேசாமல் அதை மொத்தமாக அழித்து விடலாம் என்றும் அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement