இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது தற்போது இலங்கையில் நடைபெற்று வருகிறது. விராட் கோலி தலைமையிலான முதன்மை இந்திய அணி தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளதால் ஷிகார் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி தற்போது இந்த பயணத்தில் பங்கேற்று விளையாடி வருகிறது.
இந்த அணியில் புதுமுக வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக இன்றைய மூன்றாவது போட்டியில் அறிமுக வீரர்களாக 5 வீரர்கள் விளையாடுகின்றனர். ஏற்கனவே இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளதால் இந்த போட்டியில் 5 வீரர்களுக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், ராகுல் சாகர், சேத்தன் சகாரியா ஆகிய ஐவர் தற்போது இன்றைய மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகின்றனர். இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் மூன்றாவது வீரராக களம் புகுந்து 46 ரன்கள் அடித்து அரை சதத்தை தவறவிட்டாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேபோன்று மிடில் ஆர்டரில் வழக்கம் போலவே சூரியகுமார் இன்றும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டம் இழுந்து சென்றுவிட்டார்.
இந்நிலையில் மிடில் ஆர்டரில் சீனியர் வீரர் ஒருவரின் ஆட்டம் மிக மோசமாக உள்ளது என ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர். பல ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி வரும் மணிஷ் பாண்டே அவ்வப்போது வாய்ப்பை பெற்று அணியில் விளையாடி வந்தாலும் தொடர்ந்து பெரிய ரன் குவிப்பை வழங்காமல் இருந்து வருகிறார். நல்ல துவக்கம் கிடைத்தாலும் இவரிடம் பெரிய இன்னிங்ஸ் வரவில்லை என்ற குறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனாலும் அணி நிர்வாகம் மணிஷ் பாண்டேவுக்கு நம்பிக்கை வைத்து வாய்ப்பு அளித்து வருகின்றது. முதல் இலங்கை அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தாலும் இன்றைய மூன்றாவது போட்டியில் மணிஷ் பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய ஆட்டத்திலும் 19 பந்துகளை சந்தித்த அவர் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இருந்து வெளியேறியது அவர் மீது மீண்டும் விமர்சனத்தை எழுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.