துணை கேப்டனை ட்ராப் பண்ணக்கூடாது ரூல்ஸ் இருக்கா? ராகுலுக்கு பதில் கில்லுக்கு சான்ஸ் கொடுங்க – முன்னாள் வீரர் அதிரடி

Shubman Gill KL rahul
- Advertisement -

நடைபெற்று முடிந்த நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்கள் அசத்திய நிலையில் ஓய்வெடுத்த கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடருக்கு திரும்புகிறார்கள். இதனால் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் வீட்டுக்கு கிளம்ப வேண்டிய பரிதாபத்தை சந்தித்துள்ளார்கள். குறிப்பாக ஒருநாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி 50, 45* என நல்ல ரன்களை குவித்து சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுப்மன் கில்லுக்கு சீனியர்கள் வருவதால் வங்கதேச ஒருநாள் தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

Shubman Gill

- Advertisement -

ஆனால் ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் அணியில் அதிக ரன்கள் குவித்து முதல் வருடத்திலேயே கோப்பை வெல்ல முக்கிய பங்காற்றிய அவர் அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் ஆட்டநாயகன் விருதுகளை வென்று 3 – 0 (3) என்ற கணக்கில் வைட்வாஷ் வெற்றியுடன் இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார். அந்த வரிசையில் இந்த நியூசிலாந்து தொடரிலும் அசத்திய அவருக்கு 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பையில் தொடக்க வீரராக களமிறங்குவதற்கு தேவையான வாய்ப்புகளை இப்போதே கொடுத்து வளர்க்குமாறு கோரிக்கைகள் காணப்படுகின்றன.

சட்டம் இருக்கா:

இருப்பினும் கேப்டன் ரோகித் சர்மாவுடன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படும் நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் சமீப காலங்களில் மிகவும் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தி மோசமான ஃபார்மில் உள்ளார். குறிப்பாக சமீபத்திய ஆசிய மற்றும் டி20 உலக கோப்பைகளில் அவரது சுமாரான பேட்டிங் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. அத்துடன் கத்துக்குட்டி அணிகளுக்கு எதிராக அடிப்பது, பெரிய அணிகளுக்கு எதிரான முக்கிய போட்டிகளில் சொதப்புவது, பெரிய ரன்களை குவிக்க வேண்டும் என்ற சுயநல எண்ணத்துடன் விளையாடுவது போன்ற அவருடைய பேட்டிங் அணுகுமுறை சமீப காலங்களில் ரசிகர்கள் மற்றும் நிறைய முன்னாள் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

KL Rahul Lungi Nigidi

ஆனாலும் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக அவருக்கு உலகக் கோப்பை உட்பட அனைத்து முக்கிய போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சுமாராக செயல்படும் பட்சத்தில் துணை கேப்டனாக இருப்பதால் நீக்கக்கூடாது என்று எதுவும் சட்டம் உள்ளதா? என்று முன்னாள் இந்திய வீரர் மணிந்தர் சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது துணை கேப்டனாக இருந்தாலும் சுமாராக செயல்பட்டால் அவரை அதிரடியாக நீக்கி விட்டு சுப்மன் கில் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“கடந்த ஜிம்பாப்வே தொடரிலிருந்து கேஎல் ராகுல் மந்தமாக செயல்படுவது தெளிவாக தெரிகிறது. இருப்பினும் கிளாஸ் கிரிக்கெட் வீரரான அவர் அதிலிருந்து வெளியே வந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அனைவரது விருப்பமாகும். அதே சமயம் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் 5 – 6 ஓவர்களை நீங்கள் அனைத்து நேரங்களிலும் மெதுவாக விளையாடி சோதனை முயற்சி செய்து வீணடிக்க முடியாது. எனவே டி20 மற்றும் ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் பவர் பிளே ஓவர்களில் பயமின்றி அதிரடியாக விளையாடும் அணுகுமுறையை அவர் பின்பற்ற வேண்டும். இல்லையேல் நீங்கள் துணைக் கேப்டனாகவே இருந்தாலும் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்படுவதற்கு தகுதியானவர்கள்”

“அதே சமயம் சுப்மன் கில் மற்றவர்களை காட்டிலும் வித்தியாசமான கிளாஸ் நிறைந்த வீரராக தோன்றுகிறார். அதனால் அவர் ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும். ஏனெனில் இப்போது வரை கிடைத்த வாய்ப்புகளில் அவர் அசத்தலாக செயல்பட்டுள்ளார். அவருக்கு வெள்ளை பந்து கிரிக்கெட்டில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் டெஸ்ட் போட்டிகளில் 3 – 5 இடங்களில் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அத்துடன் அவரிடம் நாம் அனைவரும் எதிர்பார்க்கும் பயமின்றி விளையாடும் அணுகுமுறை உள்ளது” என்று கூறினார்.

Advertisement