தரமான ரிஷப் பண்ட்டை எதிர்த்து சாம்சனை வில்லனாக்காதீங்க – இந்திய ரசிகர்களை விளாசும் சஞ்சுவின் பயிற்சியாளர்

Rishabh Pant Sanju Samson
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் முதலிரண்டு போட்டிகளின் முடிவில் 1 – 0* என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்தியா கடைசி போட்டியில் வென்றால் மட்டுமே குறைந்தபட்சம் தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலைமையில் உள்ளது. அதை விட இந்த சுற்றுப்பயணத்தில் சிறப்பாக செயல்பட்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததும் சொதப்பலாக செயல்பட்டும் ரிசப் பண்டுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைப்பதும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் செயல்பாடுகளை வெளிப்படுத்தி தன்னை நிரூபித்துள்ள ரிஷப் பண்ட் டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகள் என்ற அதிகப்படியான வாய்ப்புகளை பெற்றும் எப்போதுமே சிறப்பாக செயல்பட்டதில்லை.

அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து மண்ணில் அடித்த ஒரு சதத்தை தவிர்த்து பெரும்பாலும் சுமாராகவே செயல்பட்டு வரும் அவரை அடுத்த தலைமுறை விக்கெட் கீப்பராகவும் கேப்டனாகவும் வளர்க்க நினைப்பதால் எது நடந்தாலும் அணி நிர்வாகம் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறது. ஆனால் அதற்காக அறிமுகமான 2015 முதல் 2021 வரை எப்போதுமே நிலையான வாய்ப்புகளை பெறாத சஞ்சு சாம்சன் இந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்டு நல்ல பார்மில் இருந்தும் அவருக்காக நியாயமின்றி அதிரடியாக நீக்கப்பட்டது தான் ரசிகர்களை கொந்தளிக்க வைக்கிறது.

- Advertisement -

வில்லனாக மாற்றாதீங்க:
அதனால் பொறுமையிழந்த ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாகவே சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாகவும் ரிஷப் பண்ட் மற்றும் இந்திய அணி நிர்வாகத்துக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் போராடி வருகிறார்கள். அதன் உச்சகட்டமாக கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலக கோப்பை வரை சஞ்சு சாம்சனுக்கான ஆதரவு குரல் உலக அரங்கில் பிரம்மாண்டமாக ஒலித்து வருகிறது. இந்நிலையில் ஆதரவு கொடுக்கிறோம் என்ற பெயரில் தனது திறமையை நிரூபித்ததால் வாய்ப்பு பெற்று வரும் ரிஷப் பண்ட்டை எதிர்ப்பதாக நினைத்து சஞ்சு சம்சனை ரசிகர்கள் வில்லனாக மாற்றுவதாக அவரது பயிற்சியாளர் பிஜு ஜார்ஜ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு.

“தற்போது சமூக வலைதளங்களில் அனைவரும் தேவையின்றி ரிஷப் பண்ட்டுக்கு எதிராக திரும்பியுள்ளார்கள். நீண்ட காலமாக சிறப்பாக செயல்பட்ட காரணத்தாலேயே பண்ட் இந்திய அணியில் உள்ளார். அதே சமயம் அவருக்கும் சஞ்சு சாம்சனுக்கும் இடையே போட்டி கிடையாது. சாம்சனும் இந்தியாவுக்காக அதுவும் பேட்ஸ்மேனாக விளையாடுகிறார். மறுபுறம் ரிஷப் பண்ட் நல்ல விக்கெட் கீப்பிங் திறமைகளை கொண்டுள்ளார். அவர் நீண்ட வருடங்களாக விக்கெட் கீப்பராக சொதப்பலாக செயல்படவில்லை. அதனாலேயே வெள்ளை மற்றும் சிவப்பு நிறப்பந்து இந்திய அணியில் அவர் நீண்ட காலம் விளையாடி வருகிறார்”

- Advertisement -

“தற்போது வேண்டுமானால் அவர் தடுமாறலாம். ஆனால் வரலாற்றில் ஆடம் கில்கிறிஸ்ட் அல்லது வீரேந்திர சேவாக் முதல் இது போன்ற தடுமாற்றத்தை சந்திக்காதவர்கள் கிடையாது. ஆனால் கேரள ரசிகர்கள் ரிஷப் பண்ட்டை வைத்து சஞ்சு சாம்சனை பிசிசிஐக்கு எதிராக திருப்புவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இது மிகவும் தவறானது. அதனால் கேரளாவில் இருக்கும் அரசியல்வாதிகள் கிரிக்கெட் என்பது மற்றொரு அரசியல் விளையாட்டு என்றும் அதில் சஞ்சு சாம்சன் வீணடிக்கப்படுகிறார் என்றும் நினைக்கிறார்கள்”

“ஆனால் அதில் உண்மையில்லை. அதை நம்ப வேண்டாம் ஏனெனில் தற்சமயத்தில் சூழ்நிலைகள் அவருக்கு சாதகமாக இல்லை அவ்வளவு தான். அதே சமயம் அவரை இந்திய வாரியத்தில் யாரும் குறி வைக்கவில்லை. குறிப்பாக லக்ஷ்மன் போன்றவர் பயிற்சியாளராக இருக்கும் போது அது போன்ற வேலைகள் நடைபெறாது. அத்துடன் வலது கை பேட்ஸ்மேனாக இருப்பதால் சஞ்சு சாம்சன் நிராகரிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் அதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. பொதுவாக 60 – 70% பவுலர்கள் வலது கை பேட்ஸ்மன்களுக்கு எதிராக பந்து வீசி பயிற்சி எடுப்பார்கள்”

“ஆனால் நீங்கள் நல்ல பவுலராக இருந்தால் இடது – வலது என எந்த வகையான பேட்ஸ்மேனாக இருந்தாலும் குறிப்பாக சிவ்நரேன் சந்தர்பால் போல் வித்தியாசமான ஸ்டேன்ஸ் கொண்டிருந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். அந்த வகையில் உங்களிடம் திறமை இருந்தால் வலது இடது என எந்த கை பேட்ஸ்மேனாக இருந்தாலும் அசத்த முடியும் என்பதே என்னுடைய நம்பிக்கையாகும்” என்று கூறினார்.

Advertisement