இந்தியா உட்பட அனைத்து அணிகளையும் தோற்கடித்து தொடர் நாயகன் விருது வெல்வேன் – பாக் வீரர் நம்பிக்கை

pak
- Advertisement -

வரலாற்றின் 15ஆவது ஆசிய கிரிக்கெட் கோப்பை ஆகஸ்ட் 27-ஆம் தேதியான இன்று ஐக்கிய அரபு நாடுகளில் கோலாகலமாக துவங்கியது. விரைவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் 20 ஓவர் தொடராக நடைபெறும் இந்த தொடரின் இன்றைய முதல் போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் மோதினாலும் ஆகஸ்ட் 28ஆம் தேதியான நாளை இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் போட்டிக்கு தான் உலக அளவிலான எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஏனெனில் கிரிக்கெட்டின் பரம எதிரிகளான இவ்விரு அணிகளும் எல்லை பிரச்சனை காரணமாக இதுபோல் ஆசிய மற்றும் உலக கோப்பையில் மட்டும் மோதி வருகின்றன.

Babar Azam Rohit Sharma IND vs PAK

அத்துடன் கடைசியாக இதே துபாயில் இவ்விரு அணிகளும் மோதிய போது வரலாற்றில் முதல் முறையாக உலகக் கோப்பையில் இந்தியாவை மண்ணைக் கவ்வ வைத்த பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி எழுதியது. அதனால் அவமானத்தை சந்தித்த இந்தியா இம்முறை ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கி தக்க பதிலடி கொடுக்குமா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. முன்னதாக கடந்த வருடம் வெற்றி பெறுவதற்கு ஆட்டநாயகன் விருதை வென்று முக்கிய பங்காற்றிய பாகிஸ்தானின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் சாஹீன் அப்ரிடி இம்முறை கடைசி நேரத்தில் சந்தித்த காயத்தால் விலகியுள்ளார். அதனால் ரோகித் சர்மா, ராகுல் உள்ளிட்ட டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் இந்தியாவும் தப்பித்து விட்டதாக அந்நாட்டு ரசிகர்கள் முன்னாள் வீரர்களும் கிண்டலடித்து வருகிறார்கள்.

- Advertisement -

வெல்லுமா பாகிஸ்தான்:
ஆனால் அவர் இல்லாமல் வேகப்பந்து வீச்சு துறையில் பெரிய பின்னடைவை சந்தித்துள்ள பாகிஸ்தானுக்கு பாபர் அசாம், முகமத் ரிஸ்வான், பகர் ஜமான் ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை தவிர்த்து அனுபவம் வாய்ந்த தரமான பேட்ஸ்மேன்கள் இல்லாததால் மிடில் ஆர்டர் பலவீனமாக காட்சியளிக்கிறது. அதேபோல் சுழல் பந்து வீச்சிலும் நல்ல திறமையான இளம் வீரர்கள் இருந்தாலும் அவர்கள் உலகத்தரமான அனுபவம் வாய்ந்தவர்களாக இல்லை. இப்படி நிறைய அம்சங்களில் பின்னடைவை சந்தித்தாலும் இந்தியாவின் பலவீனத்தை பயன்படுத்தி கடந்த முறை தோற்கடித்தது போல் இம்முறையும் வெல்வோம் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் சவால் விடுத்து வருகின்றனர்.

shadab 1

மறுபுறம் அனைத்து துறைகளிலும் உலகத்தரம் வாய்ந்த அனுபவமிக்க வீரர்களை கொண்டுள்ள இந்தியா சமீபத்திய தொடர்களில் எதிரணிகளை தோற்கடித்து நல்ல பார்மில் உள்ளதால் பாகிஸ்தானை தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான போட்டி உட்பட இந்த ஆசிய கோப்பை முழுவதும் மிகச்சிறப்பாக செயல்பட்டு பாகிஸ்தானுக்கு கோப்பையை வென்று தொடர் நாயகன் விருதையும் வெல்வேன் என்று அந்த அணியின் இளம் வீரர் சடாப் கான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

பாகிஸ்தானின் முதன்மை சுழல் பந்துவீச்சு ஆல்-ரவுண்டராக கருதப்படும் இவர் இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியது பின்வருமாறு. “இந்த ஆசிய கோப்பையின் தொடர் நாயகனாக செயல்பட நான் விரும்புகிறேன். இப்படி சொல்வதை விட செய்வது கடினம் என்று எனக்கு தெரியும். ஆனால் அதை செய்வதற்கான வழியும் திறமையும் என்னிடம் உள்ளது. அணிக்காக என்னுடைய சிறந்தவற்றை கொடுப்பதில் முழுமையான தன்னம்பிக்கையுடன் இருக்கும் எனக்கு வெற்றிகளும் சாதனைகளும் தேடி வரும்”

Shadab

“அந்த வகையில் என்னுடைய கனவுகளை சிறந்த செயல்பாடுகளாக வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதுக்கான கோப்பையை வென்றால் அது எனக்கு மிகப்பெரிய சாதனையாக அமையும். ஆனால் என்னுடைய முதன்மையான இலக்கு பாகிஸ்தானுக்கு ஆசிய கோப்பையை வெல்வதாகும். மற்றவையெல்லாம் அதற்கு அடுத்தபடியாகும். என்னை போலவே எங்களுடைய அணியில் அனைவரும் அமைதியாகவும் பதற்றமடையாமலும் இருக்கிறோம். திட்டங்களை நேராக எளிதாக செயல்படுத்தி ஒரு நேரத்தில் ஒரு போட்டியில் மட்டும் கவனத்தை செலுத்த நாங்கள் முயற்சிக்க உள்ளோம்” என்று கூறினார்.

- Advertisement -

23 வயது நிரம்பியுள்ள இவர் இதுவரை 64 டி20 போட்டிகளில் பாகிஸ்தானுக்காக 73 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சாஹீன் அப்ரிடி விலகியது எங்களுக்கு பின்னடைவு என்று தெரிவிக்கும் சடாப் கான் அவர் இல்லாமலும் வெற்றி பெறுவதற்கான திறமை அணியில் இருப்பதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:  விராட் கோலி பார்முக்கு திரும்பனும்னு கடவுளை பிராத்திக்கிறோம் – 2 பாக் வீரர்களின் கருத்தால் ரசிகர்கள் நெகிழ்ச்சி

“எங்களுடைய முதன்மையான பவுலர் சாஹீன் அப்ரிடி இல்லாதது பெரிய பின்னடைவாகும். ஆனால் கிரிக்கெட்டின் அழகே அது ஒருவரை சார்ந்த விளையாட்டல்ல அணியை சார்ந்த விளையாட்டு என்பதில் உள்ளது. அந்த வகையில் எங்களது அணியில் நிறைய மேட்ச் வின்னிங் பவுலர்கள் உள்ளனர். ஹாரீஸ் ரவூப், முகமத் வாசிம், நசீம் ஷா, சன்வாஸ் தஹானி போன்றவர்கள் வெற்றியைப் பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது” என்று கூறினார்.

Advertisement