அப்போவே சொல்லிருக்கணும், இப்போ சொல்லி ஈகோவை காட்டத்திங்க – விராட் கோலியை சாடிய மற்றொரு ஜாம்பவான்

Kohli
- Advertisement -

ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 2022 ஆசிய கோப்பையில் எளிதாக வென்று கோப்பையை தக்க வைக்கும் என்று கருதப்பட்ட நடப்புச் சாம்பியன் இந்தியா லீக் சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றாலும் முக்கியமான சூப்பர் 4 சுற்றில் முக்கிய நேரங்களில் சொதப்பி அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது. முக்கிய வீரர்களின் சொதப்பலான ஆட்டம், தவறான அணி தேர்வு போன்ற பல அம்சங்கள் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொடரில் ஒரே ஆறுதல் என்னவெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக தினந்தோறும் கடுமையான விமர்சனங்களை சந்தித்த விராட் கோலி அதை அடித்து நொறுக்கும் வகையில் முக்கால்வாசி ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் விளாசி ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்து ஜாம்பவானுக்கு நிகராக சாதனைகளை படைத்த அவரை சதமடிக்கவில்லை என்ற காரணத்துக்காக நிறைய முன்னாள் வீரர்கள் அணியிலிந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்தனர். அதற்கு பதிலடி கொடுக்க ஒரு மாதம் ஓய்வெடுத்து புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய அவர் இலங்கைக்கு எதிராக டக் அவுட்டானாலும் 35, 59*, 60 என 3 போட்டிகளில் பெரிய ரன்களைக் குவித்து இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மேனாக முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

தோனி சர்ச்சை:
முன்னதாக 2014இல் பொறுப்பேற்ற போது சொந்த மண்ணில் மட்டும் வெல்லும் அணியாக தர வரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தனது ஆக்ரோசமான கேப்டன்ஷிப் வாயிலாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக தரம் உயர்த்திய விராட் கோலி இந்தியா மட்டுமல்லாது ஆசிய அளவில் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டனாக இருந்த போதிலும் பணிச்சுமையை நிர்வகிக்க கடந்த ஜனவரி மாதம் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அன்றைய நாளில் முன்னாள் கேப்டன் தோனியை தவிர யாருமே தமக்கு ஆறுதல் மெசேஜ் அனுப்பவில்லை என்று பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்குப் பின் தெரிவித்திருந்தார்.

Kohli

அவரது அந்தக் கருத்து இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தாலும் மெசேஜ் அனுப்பாதவர்களின் பெயரையும் வெளியிடுமாறு முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தினார். அந்த வரிசையில் இணைந்துள்ள மற்றொரு முன்னாள் வீரர் மதன் லால் இந்த செய்தியை கேப்டன் பதவியை ராஜினாமா செய்த போதே தெரிவித்திருக்க வேண்டுமே தவிர இப்போது கூறுவதில் எந்த பயனுமில்லை என்று விமர்சித்துள்ளார். மேலும் முக்கியமான ஆசிய கோப்பை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பாதியில் இவ்வாறு தெரிவிப்பது அணியில் ஈகோவை ஏற்படுத்தும் எனக்கூறும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்த நேரத்தில் விராட் கோலி இந்த கருத்தை தெரிவித்திருக்க கூடாது. ஏனெனில் நீங்கள் இந்த தொடரின் பைனலுக்கு தகுதி பெறுவதற்காக பாதியில் விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள். இத்தொடரில் நீங்கள் பார்முக்கு திரும்பியது சிறப்பான அம்சமாகும். இருப்பினும் உங்களுக்கு பிரச்சனை இருந்தால் அதற்கு யாராவது தொடர்பு கொண்டு ஆலோசனை தெரிவித்தாலும் தெரிவிக்காவிட்டாலும் அதை சரிசெய்வது உங்களுடைய வேலையாகும். மேலும் நீங்கள் இதை சில மாதங்களுக்கு முன்பாகவே சொல்லியிருக்க வேண்டும். சிறப்பாக செயல்படாத போது நீங்கள் தான் உங்களையே முன்னேற்றிக் கொள்ள வேண்டும். அதை விட்டுவிட்டு இந்த சமயத்தில் ஈகோவை வெளிப்படுத்தக் கூடாது” என்று கூறினார்.

அதாவது இது போன்ற கருத்துக்கள் ஆசிய கோப்பை தொடரின் பாதியில் சொல்லும் போது இதர வீரர்களை பாதிக்கும் என்று தெரிவிக்கும் மதன் லால் இந்த கருத்துக்களை கேப்டன் பதவியை ராஜினாமா செய்த போதே சொல்லியிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அத்துடன் உங்களுக்கு பிரச்சனை என்றால் அதை நீங்களே சரி செய்து கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்கள் வழியே வந்து ஆலோசனை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கக் கூடாது எனவும் கூறியுள்ளார்.

ஆனால் இந்தியாவுக்காக நிறைய பாடுபட்டும் தமக்கு யாரும் ஆறுதல் தெரிவிக்கவில்லையே என்ற ஆதங்கத்தை தான் விராட் கோலி வெளிப்படுத்தினார் என்ற நிலைமையில் சதமடிக்கவில்லை என்பதற்காக விமர்சித்த இது போன்ற முன்னாள் வீரர்கள் இந்த ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும் விமர்சிக்கிறார்களே என்று ரசிகர்கள் வினவுகிறார்கள்.

Advertisement